சனி, 6 பிப்ரவரி, 2010
மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்
மதுரையில் புரோக்கர்கள் உதவியுடன் போலி ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட் வழங்கிய உதவி பாஸ்போர்ட் அதிகாரி உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் 9 தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இங்கு போலி ஆவணங்கள் மூலம் புரோக்கர்கள் பாஸ்போர்ட் பெற்று தருவதாக சிபிஐக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிபிஐ டிஎஸ்பி சங்கர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கிருந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் ஊழியர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாய்(58), இளநிலை உதவியாளர் துரைராஜ்(51), அலுவலக உதவியாளர் அன்பழகன்(49), புரோக்கர்கள் இப்ராகிம்மீரான் (35), பாபு என்ற பக்ரூதீன் (39) ஆகியோரை கைது செய்தனர்.
கீதாபாய் மதுரை சர்வேயர் காலனி ஆவின் நகரில் வசிக்கிறார். அவரது வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் ரூ.8.5 லட்சம் பணம் உட்பட ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி முடக்கினர். கீதாபாய் தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்திலும், மற்ற 4 பேர் அண்ணாநகர் காவல் நிலையத்திலும் இரவு முழுவதும் விசாரிக்கப்பட்டனர். நேற்று மதியம் 1 மணிக்கு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 5 பேர் மீதும் 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களை வரும் 19ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார். அதன்பிறகு கீதாபாய் திருச்சி மத்திய சிறையிலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
0 comments:
கருத்துரையிடுக