வியாழன், 29 ஜூலை, 2010
`ஐ.ஆர்.சி.டி.சி.' இணைய தளம் மூலம் ரெயில் டிக்கெட் விற்பதை நிறுத்த முடிவு
ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் மூலம் ரெயில் டிக்கெட் விற்பது நிறுத்தப்படும். இனி ரெயில்வே இணைய தளம் மூலம் இ-டிக்கெட் விற்பனை செய்ய ரெயில்வே இலாகா திட்டமிட்டு உள்ளது.
ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு வேண்டிய உணவு மற்றும் சிற்றுண்டியை வழங்கும் பொறுப்பை, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் மேற்கொண்டு இருந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 450 கோடி மதிப்புள்ள உணவு ரெயில் பயணிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது. உணவின் தரத்திலும், வினியோகத்திலும் பல குறைபாடுகள் கூறப்பட்டதால், சமீபத்தில் இந்த பொறுப்பை, ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து ரெயில்வே துறை எடுத்துக்கொண்டது.
பின்னர் இது வேறு ஒரு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணைய தளம் மூலம் ரெயில்வே டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. 30 சதவீத புக்கிங் இதன் மூலம் நடந்து நடக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 122 கோடி இந்த நிறுவனத்துக்கு கிடைக்கிறது.
இந்த நிலையில் டெல்லியில் ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் இ-டிக்கெட் பணி நடந்து வருகிறது. அதிகாலையில் இணையதளம் திறக்கப்பட்டதும், ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணைய தளத்தில் இ-டிக்கெட் எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது என்ற புகார் வந்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதள ஏஜெண்டுகள் தட்கல் புக்கிங் செய்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்பட்டது.
எனவே இ-டிக்கெட் பணியை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து ரெயில்வே துறையே எடுத்துக்கொள்ளலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செப்டம்பர் மாத இறுதிக்குள் அமல் படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம்.
ரெயில்வே துறையின் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பிரிவு, இ-டிக்கெட் விற்பனையை மேற்கொள்ள தயாராக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் போது இதன் பணி www.indianrailways.gov.inஎன்ற இணையதளத்தில் செயல்படும்.
இந்த இணைய தளத்தில் பயண டிக்கெட் நிலை, சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள், தங்கும் இடங்கள் உள்பட அனைத்து தகவல்களும் பெறலாம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ரெயில் டிக்கெட் பதிவை ரெயில்வே துறை தனது இணைய தளம் மூலம் ஏற்றுக்கொண்டால், ஐ.ஆர்.சி.டி.சி.க்கு பெரிய அடியாக கருதப்படும். இதை ஈடுகட்டும் விதமாக அந்த நிறுவனம் புதிய சுற்றுலா திட்டங்களை திருவிழா காலங்களில் அறிவிக்க திட்டமிட்டு உள்ளது.

0 comments:
கருத்துரையிடுக