ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

குஜராத் கலவரம் தொடர்பாக மோடி மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது அத்வானி: ஜஸ்வந்த் சிங்

குஜராத் கலவரத்தின் போது நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் வாஜ்பாயை அத்வானிதான் தடுத்தார் என்று பாரதிய ஜனதாவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
காந்தகார் விமான கடத்தலின் போது தீவிரவாதிகள் 3 பேரை விடுவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அத்வானி கூறுவது பொய். அவரது ஒப்பதலுடன்தான் தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர் என்று நேற்று முன்தினம் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இந்த நிலையில், தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது அப்போதைய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது மிகவும் கோபமும் வருத்தமும் கொண்டிருந்தார்.
குஜராத்தில் அமைதி திரும்ப உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால், பிரதமர் பதவியையே அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அப்போது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. நாடாளுமன்ற அலுவலகத்தில் இருந்த வாஜ்பாய், ஒரு பேப்பரை எடுத்து ராஜினாமா கடிதத்தை எழுதினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நான், என்ன செய்கிறீர்கள்? ராஜினாமா செய்ய வேண்டாம் என்று அவரை மிகவும் கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தினேன். அப்போது அத்வானியும் அருண் ஜெட்லியும் இருந்தனர்.
இதன்பின், கோவாவில் நடந்த பா.ஜ. கூட்டத்துக்கு வாஜ்பாய், அத்வானி, ஜெட்லி ஆகியோருடன் நானும் விமானத்தில் சென்றேன். அப்போது, குஜராத் பிரச்னை பற்றி பேச்சு வந்தது. குஜராத்தில் என்ன செய்ய வேண்டும் என்று வாஜ்பாய் கேட்டார். அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. குஜராத் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்ற வாஜ்பாய் மீண்டும் கேட்டார். அப்போது, சீட்டை வீட்டு அத்வானி எழுந்து சென்றார். என்ன செய்ய வேண்டும் என்று அத்வானியிடம் கேளுங்கள் என்று வாஜ்பாய் கூறினார்.
அத்வானியிடம் நான் கேட்டபோது, மோடி மீது நடவடிக்கை எடுத்தால் கட்சியில் பிரச்னை ஏற்படும் என்று அத்வானி தடுத்து விட்டார்.
இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.

நன்றி: தினகரன்

0 comments:

கருத்துரையிடுக