வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

வியக்க வைக்கும் சுப்ரீம் கோர்ட்டின் மற்றொரு தீர்ப்பு



மருமகளை உதைத்தல், விவாகரத்து செய்வதாக மிரட்டுதல் குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்

டெல்லி: மருமகளை எட்டி உதைத்தல், விவாகரத்து செய்து விடுவோம் என்று மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும் மாமியார், கணவர், அல்லது கணவர் குடும்பத்தாரின் செயல்களை கொடூரமான குற்றமாக கருத முடியாது. இதற்காக அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதேபோல, மருமகளை மாமியார் அடிக்கடி வேலை வாங்குவது அல்லது தான் உடுத்திய உடைகளை மருமகளுக்கு கொடுத்தாலோ அதையும் குற்றச் செயலாக கருத முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

இந்த பரபரப்பு உத்தரவை நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் பிறப்பித்த இந்த உத்தரவில், ஒரு வேளை மருமகள் திருமணத்தின்போது, தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த நகைககள், பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களை மாமியார் எடுத்துக் கொண்டால், அது ஐபிசி 406வது பிரிவின் கீழ் நம்பிக்கைத் துரோகச் செயலாகும் என்றும் கூறியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோனிகா. இவரது கணவர் விகாஸ் சர்மா. இவர் தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றி வருகிறார். விகாஸ் சர்மாவின் பெற்றோர் பாஸ்கர்லால் மற்றும் விமலா. மோனிகா, விகாஸின் 2வது மனைவி ஆவார்.

மோனிகாவுக்கும், விகாஸின் தாயார் விமலாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து தனது மாமியார் மற்றும் கணவர் தன்னை சித்திரவதைப்படுத்துவதாக கூறி பாட்டியாலா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் மோனிகா. அதை விசாரித்த கோர்ட், விகாஸ் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது விகாஸ் குடும்பம். அங்கு அந்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை விகாஸ் குடும்பம் அணுகியது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில், தன்னை தனது மாமியார் காலால் எட்டி உதைத்ததாகவும், தனது தாயாரை பொய் சொல்லி என்று கூறித் திட்டியதாகவும், உன்னை விவாகரத்து செய்து விடுவான் எனது மகன் என்று கூறியதாகவும் மனுதாரர் (மோனிகா) கூறியுள்ளார்.

இவை அனைத்தும் ஐபிசி 498- பிரிவின் கீழ் குற்றச் செயலாகாது, தண்டனைக்குரிய குற்றமும் ஆகாது.

அதேபோல தனது கணவரை தனக்கு எதிராக மாமியார் மாற்றி விட்டார், தனது பழைய உடைகளை அணியுமாறு கூறினார், தொடர்ந்து தன்னை வேண்டும் என்று வேலை வாங்கி வந்தார் என்று மனுதாரர் கூறுவதும் தண்டனைக்குரிய குற்றமல்ல. இவற்றை கொடுமைப்படுத்தும் செயல்களாக கருத முடியாது.

அதேபோல எனது மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான் என்று கூறி மாமியார் மிரட்டியதாக மனுதாரர் கூறுவதும் கூட தண்டனைக்குரிய குற்றச் செயலாக கருத முடியாது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்..

0 comments:

கருத்துரையிடுக