வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
ஆர்எஸ்எஸ் சந்தர்ப்பவாத அமைப்பாகிவிட்டது-ஜஸ்வந்த்
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
ஜின்னா குறித்து அத்வானி என்ன சொன்னார். அதையே தான் என் புத்தகத்திலும் கூறியிருக்கிறேன். இதில் அத்வானிக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?.
புத்தகம் எழுதியதற்காகத் தான் என்னை நீக்கினார்களா.. அல்லது வேறு காரணமா என்றெல்லாம் நான் யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவி்ல்லை.
என்னை கட்சியைவிட்டு நீக்கி என்னை சிறுமைப்படுத்த முயன்றுள்ளனர். இதன்மூலம் கட்சியும் சிறுமைப்படுத்தப்பட்டதை அவர்கள் உணர வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றவுடன் நான் கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில், ''இந்துத்துவா என்றால் என்ன?, இந்துத்துவா என்ற பெயரில் நாம் எதை மக்களிடம் முன் வைக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியிருந்தன். கட்சி இப்படியே செயல்பட்டால் இனிமேல் கட்சி மிதமானவர்களிடம் இருக்காது. தீவிர மத சிந்தனை உடையவர்கள் வசம் போய்விடும் என்று அஞ்சுகிறேன் என்று கூறியிருந்தேன். இன்னும் நிறைய எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தை இப்போது பொது மன்றத்தில் வெளியிடும் நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.
இந்தக் கடிதத்தை நான் பாஜக தலைமையிடம் தந்தபோது, தேர்தல் தோல்வி குறித்து ஆராயக் கூடும் கூட்டத்தி்ல் இது குறித்து விவாதிப்போம் என்றனர். ஆனால், அந்தக் கூட்டத்தைக் கூட்டிய முதல் நாளிலேயே என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இதன்மூலம் தோல்வி குறித்து விவாதிப்பதை தவிர்க்கின்றனர் என்பது புரிகிறது.
ஜின்னா குறித்து புத்தகம் எழுதுவதை அத்வானி, ராஜ்நாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரிடம் நான் முன்பே சொல்லிவிட்டேன். ஆனால், மக்களவைத் தேர்தல் முடியும் வரை அதை வெளியிடாதீர்கள் என்றனர். இதனால் நான் புத்தகம் எழுதியது இவர்களுக்குத் தெரியாது என்பதில்லை.
பாஜக மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்சும் நிறைய மாறிவிட்டது. ஆட்சியில் இருந்ததால் பாஜகவுக்கு அதிகார போதை ஏறியது. அதே போல ஆர்எஸ்எஸ்சுக்கும் அதிகாரத்தில் ஆசை ஏறிவிட்டது. காரணம், ஆர்எஸ்எஸ் சங் சாலக், பிரபாகாரி ஆகியவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் நிர்வாகப் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. இந்தப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு அதிகார போதை வந்துவிட்டது. சந்தர்ப்பவாதிகளாக ('Suvidhavadi') மாறிவிட்டனர்.
உண்மையைச் சொன்னால், ஆர்எஸ்எஸ்சும் கிட்டத்தட்ட பாஜக போலவே மாறிவிட்டது. இதனால் தேர்தல் தோல்வி குறித்து பாஜக மட்டுமல்ல ஆர்எஸ்எஎஸ்சும் ஆராய வேண்டும். இதை அத்வானியிடம் மட்டுமல்ல, மோகன் பகவத்திடமே சொல்லியிருக்கிறேன்.
நான் எந்தக் காலத்திலும் ஆர்எஸ்எஸ்சில் இருந்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை நான் வெளி ஆள். 15 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவன். தேசத்தையும் மக்களையும் நேசித்தவன். தவறு செய்தவர்களிடம் கேள்விகள் கேட்டதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளேன். இனி கட்சி நன்றாக வளரும் என்று அவர்கள் நினைத்தால், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.
0 comments:
கருத்துரையிடுக