செவ்வாய், 8 செப்டம்பர், 2009

ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் 600 பேர் இன்று முதல் ஒட்டுமொத்த விடுப்பு!

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 600 பேர் ஒட்டுமொத்த விடுப்பில் (மாஸ் லீவ்) சென்றுவிட்டதால், இன்று ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பல ரத்தாகிவிட்டன. பல விமான நிலையங்களில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

134 விமானங்கள் ரத்தாகியுள்ளன. சென்னை, பெங்களூரு,டெல்லி , மும்பை மற்றும் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் ஜெட் ஏர்வேஸில் பயணிக்கக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பெரும் தவிக்குள்ளாகியுள்ளனர்.

ஏர் இந்தியா உள்ளிட்ட இதர விமானங்களில் இந்தப் பயணிகளை ஏற்றி அனுப்ப ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பேசி வருகிறது.

ஜெட் ஏர்வேஸில் சில தினங்களுக்கு முன் இரு மூத்த பைலட்டுகளை நீக்கியது நிர்வாகம். இவர்களை மறுபடியும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மற்ற பைலட்டுகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் நிர்வாகத் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் தரப்படாததால், இப்போது ஒட்டுமொத்தமாக விடுப்பில் செல்லும் டெக்னிக்கைக் கையாண்டுள்ளனர். ஸ்ட்ரைக் நடத்த ஏற்கெனவே நோட்டீஸ் தந்திருந்தது விமானப் பைலட்டுகள் சங்கம். இதனை உடனடியாக தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பிவிட்டது ஜெட் ஏர்வேஸ். எனவே 600 பைலட்டுகள் சிக் லீவ் என்று விண்ணப்பம் கொடுத்துவிட்டு பணிக்கு வராமல் நின்றுவிட்டனர்.

'இது திட்டமிட்ட ஸ்ட்ரைக்தான். நிர்வாகத்தின் நன்மதிப்பையும், செயல்பாட்டையும் குலைக்கும் செயல். இப்போது நிர்வாகத்தைச் சீரமைக்கும் பணியில் உள்ளது ஜெட் நிர்வாகம். இந்த நேரத்தில் பைலட்டுகள் இப்படிச் செய்வது சட்டவிரோதம். ஆனாலும் முடிந்தவரை அதிக அளவு விமானங்களை இயக்கிக் காட்டுவோம்' என ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதே நேரம் விலக்கப்பட்ட பைலட்டுகளை மறுபடியும் பணிக்கு எடுப்பது குறித்து பேசலாம் என்று ஜெட் ஏர்வேஸ் தலாவர் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸில் மொத்தம் 1000 பைலட்டுகள் உள்ளனர். இவர்களில் 600 பேர் மாஸ் லீவில் சென்றுள்ளதால், மிச்சமிருப்பவர்களை வைத்து சமாளிக்க முயன்று வருகிறது ஜெட் ஏர்வேஸ்.

சென்னையில் 6 விமானங்கள் ரத்து:

பைலட்டுகளின் இந்த நடவடிக்கையால் சென்னை யில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 3 சர்வதேச விமானங்கள் ஆகும்.

விமானத்துறை செயலருடன் கோயல் சந்திப்பு:

இந் நிலையில் விமானப் போக்குவரத்து துறை செயலாளரை சந்தித்து தனது நிறுவன விவகாரம் குறித்து ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் பேச்சு நடத்தவுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக