சனி, 12 செப்டம்பர், 2009

தாடி வைத்த முஸ்லிம் மாணவரை நீக்கிய பள்ளிகூடத்திற்கு உச்ச நீதி மன்றம் நோட்டீஸ்

மாணவன் தாடி வைக்க உரிமை கோரிய வழக்கில் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்த முகமது சலீம் என்ற மாணவன், தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கூட விதிப்படி தாடி வைக்க அனுமதி கிடையாது. எனவே தாடியை எடுத்து முகச்சவரம் செய்து விட்டு வருமாறு பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்க மதம் அடிப்படையில் மாணவர் சலீம் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளியில் இருந்து அந்த மாணவர் நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சலீம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்து, மாணவன் சலீமின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. "தாடி வைப்பதில் பிடிவாதமாக இருந்து நாட்டை தலிபான் மயமாக்க அனுமதிக்க முடியாது" என்று நீதிபதி கட்ஜூ தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை எழுப்பியது. 
இதையடுத்து அதே மாணவர் தொடர்ந்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கட்ஜூ தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன் தனது முந்தையை உத்தரவை திரும்ப பெற்று, மனுவை புதிய பெஞ்ச் விசாரிப்பதற்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோரைக் கொண்ட புதிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாடியை ஷேவ் செய்யவில்லை என்பதற்காக மாணவரை பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் முடிவு எடுத்தது கேலிக்குரியதாக இருக்கிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 
நிர்மலா கான்வென்ட் உயர்நிலை பள்ளிக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவும், வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை மாணவர் தனது படிப்பை தொ டர அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 comments:

கருத்துரையிடுக