வெள்ளி, 23 அக்டோபர், 2009
அழிவுப் பாதையில் பாஜக
மகாராஷ்டிரா, ஹரியாணா, அருணாசலில் காங். மீண்டும் வெற்றி- பாஜக படுதோல்வி
மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது.
அங்கு பாஜக-சிவசேனா கூட்டணிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்தடுத்து 3 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.
இம் மாநிலத்தில் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மகாராஷ்டிரத்தில் 288 மொத்தமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 76 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் 130 இடங்களி்ல் அந்தக் கட்சி வென்றுள்ளன. மேலும் 18 இடங்களிலும் அந்தக் கூட்டணி முன்னணியில் உள்ளது. இதன்மூலம் ஆட்சியமைக்கத் தேவையான 148 இடங்ளை இந்தக் கூட்டணி கைப்பற்றவுள்ளது.
பாஜக 45 இடங்களிலும், அதன் கூட்டணியான சிவ சேனா 43 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளன. இதனால் இந்தக் கூட்டணிக்கு 88 இடங்களே கிடைத்துள்ளன. குறிப்பாக சிவசேனாவுக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது. ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சி 13 இடங்களிலும் பிற கட்சிகளும், சுயேச்சைகளும் 39 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இதன்மூலம் ராஜ் தாக்கரே கட்சி முதன்முதலாக சட்டசபையில் அடியெடுத்து வைக்கிறது.
ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 148 இடங்களைக் கைப்பற்றவுள்ள காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.
மும்பை, தானே, புனே உள்ளிட்ட இடங்களில் சிவசேனா-பாஜகவின் தோல்விக்கு ராஜ் தக்கரேவின் கட்சி தான் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியின் தோல்விக்கு நவ நிர்மாண் வேதிகே தான் காரணமாக அமைந்தது.
குறிப்பாக சிவசேனாவின் வாக்குளை ராஜ் தாக்கரே சிதறியடித்து சின்னாபின்னாவாக்கிவிட்டார். மேலும் தேவைப்பட்டால் காங்கிரஸ்-பவார் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரவும் தயாராக இருப்பதாக தேர்தலுக்கு முன்பே ராஜ் தாக்கரே கூறியது குறிப்பிடத்தக்கது. பால் தாக்கரேவின மகனும் சிவசேனா செயல் தலைவருமான உத்தவ் தாக்கரவைவிட ராஜ் தாக்கரேவுக்குத் தான் இளைஞர்களிடம் அதிக செல்வாக்கு உள்ளதாகவும், ராஜுடன் கைகோர்ப்பதில் தனக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் சரத் பவாரும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
ஹரியாணா:
ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மைக்கும் அதிகமாக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 90 இடங்களில் அக்கட்சி 47 தொகுதிகளில் வென்று்ள்ளது.
ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக்தள் கட்சி 32 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் மற்றவர்கள் 14 தொகுதியிலும் வென்றுள்ளனர்.
ஹரியாணாவில் காங்கிரஸைச் சேர்ந்த புபிந்தர் சிங் ஹோடா முதல்வராக உள்ளார். அவரே அடுத்த முதல்வராகவும் தொடர்வார் என்று தெரிகிறது.
அருணாச்சல்..
அருணாச்சல பிரசேத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளி்ல் காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும், மற்ற மாநில கட்சிகள் 14 இடங்களிலும், பாஜக 2 இடத்தில் மட்டும் முன்னணியில் உள்ளன.
இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்க உள்ளது. இப்போது அருணாசல் பிரதேசத்தில் தூர்ஜி கண்டும் முதல்வராக உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையாக பதவியேற்ற பின்னர் சந்தித்துள்ள முதல் சட்டசபைத் தேர்தல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்துள்ள முதல் பெரிய தேர்தல் என்பதால் மன்மோகன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு போல இந்தத் தேர்தல் முடிவுகள் பார்க்கப்பட்டன. இந்த வெற்றிகளின் மூலம் மத்தியில் காங்கிரசின் செல்வாக்கு மேலும் உயர்ந்துள்ளது. உட்கட்சிப் பூசல்களால் தத்தளித்து வரும் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மேலும் பெரும் பின்னடைவைத் தரும் என்று தெரிகிறது.
0 comments:
கருத்துரையிடுக