புதன், 4 நவம்பர், 2009
பாபர் மசூதி இடிப்பு மதவாதத்தின் உச்சகட்டம்-ப.சிதம்பரம்.
தீவிரவாதத்துக்கு எதிராக ஜமாயத் உலாமா இ ஹிந்த் இஸ்லாமிய அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்ற இந்த அமைப்பின் மாநாட்டில் பேசிய அவர், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அரசுக்கு ஜமாயத் உலாமா இ ஹிந்த் உதவ வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிராக பத்வா (தடை) விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இந்தத் தீர்மானம் முஸ்லீகளுக்கு மட்டுமான அழைப்பல்ல, நியாயமாக சிந்திக்கக் கூடிய எல்லா மக்களுக்குமான அழைப்பாகவே கருதுகிறேன்.
இதுபோல மேலும் பல நடவடிக்கைகளை எடுத்து தீவிரவாதத்தை அடியோடு களைய அரசுக்கு உதவ வேண்டும்.
ஜிகாதி தீவிரவாதத்தை எந்த அளவுக்கு எதிர்க்கிறோமோ அதே அளவுக்கு இந்துத் தீவிரவாதத்தையும் எதிர்ப்போம். தீவிரவாதம் என்பதே தவறு. அதில் மதத்துக்கு இடமில்லை.
பாபர் மசூதி இடிப்பட்டது மதவாதத்தின் உச்சகட்டம் என்று தான் சொல்வேன். மெஜாரிட்டி இந்துக்களின் ஆட்சியில் மைனாரிட்டிகளான முஸ்லீம்கள் பாதுகாப்பாக வாழ்ந்தால் தான் அது பொற்காலம். அதே போல காஷ்மீரில் மெஜாரிடடி முஸ்லீம்களின் ஆட்சியில் மைனாரி்ட்டியான இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் பாதுகாப்பாக வாழ்ந்தால், அது பொற்காலம். சிறுபான்மையாக வாழும் மக்களை அப் பகுதியின் பெரும்பான்மையான மக்கள் பாதுகாக்க வேண்டியது கடமை.
இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் ஒடு்க்கப்பட்டதால் தான் பிரச்சனை வந்தது.
இந்த பொற்கால ஆட்சி சில இடங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும் அல்லது அமல்படுத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள். அது தவறு.
மதவாதம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு முரணானது. நவீனமயத்துக்கு எதிரானது, அரசியல் சுதந்திரத்துக்கு எதிரானது. மொத்தத்தில் மக்களுக்கு எதிரானது.
இதனால் தீவிரவாதத்துக்கு எதிராக இன்னும் உரத்த, சக்தி வாய்ந்த இதுபோன்ற குரல்கள் எழ வேண்டும். சமாதானத்துக்காகவும் அன்புக்காகவும் உங்கள் குரல்கள் மேலும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.
இஸ்லாம் ஒன்றும் அந்நியமான மதமல்ல. முஸ்லீம்கள் இந்த நாட்டின் கெளரவமான குடிமக்கள். அவர்களுக்கு உரிய மரியாதையும் உரிமைகளும் தரப்பட வேண்டும் என்றார் சிதம்பரம்.
இக் கூட்டத்தில் பேசிய ஜமாயத் உலாமா இ ஹிந்த் ஒருங்கிணப்பாளர் மெளலானா மெஹ்மூத் மத்னி, தீவிரவாதிகளும் மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களையும் வன்முறையையும் கைவிட வேண்டும். நீங்கள் அதைச் செய்தால் உங்களுக்காக குரல் தர நாங்கள் தயார். உங்களுக்காக போராடவும் தயார் என்றார்.
0 comments:
கருத்துரையிடுக