வெள்ளி, 18 டிசம்பர், 2009

108 வருடங்களுக்கு பிறகு கங்கண சூரியகிரகணம் ஜனவரி 15-ந்தேதி வருகிறது: தமிழ்நாட்டில் பார்க்கலாம்

108 வருடங்களுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் 15-ந்தேதி வருகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரன் மறைக்கப்படுகிறது. இதுவே சந்திர கிரகணம். அதுபோல சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவது சூரியன் மறைக்கப்படுகிறது. இதுவே சூரியகிரகணம். உலகில் வருடத்திற்கு 3 முறை சந்திரகிரகணமும், 2 முதல் 5 வரை சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.
சூரியனை சந்திரன் நேருக்குநேர் மறைக்கும்போது அதிகபட்சமாக சூரியனை மறைத்தாலும் சூரியன் ஒரு வளையம்போல தெரியும். இதுவே கங்கண சூரியகிரகணம். அதுவும் உலகில் இது எல்லா இடத்திலும் கங்கண சூரியகிரகணமாக தெரியாது. கங்கண சூரியகிரகணம் ஒரு இடத்தில் தெரிந்தால் மீண்டும் அதே இடத்தில் தெரிய 108 ஆண்டுகள் ஆகும். அதுபோல 108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதம் 15-ந்தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தெரியும்.
இதற்கு முந்தைய கங்கண சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் 1901-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்டுள்ளது. இனி அடுத்த கங்கண சூரிய கிரகணம் 2019-ஆம் டிசம்பர் மாதம் வர உள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், கேரளாவின் தெற்கு பகுதிகளிலும் நன்றாக தெரியும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் நன்றாக காணலாம். அதாவது கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டினம், கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களிலும் தெரியும்.
சென்னையில் 82 சதவீத சூரியன் மறைக்கப்படுவதை காணலாம். மத்திய ஆப்பிரிக்கா, மாலத்தீவு, வடக்கு இலங்கை, வங்காளதேசத்தின் சில பகுதிகள், மியான்மர், சீனா ஆகிய நாடுகளில் நன்றாக தெரியும்.
சூரிய வட்டத்திற்குள் சந்திரன் மறையும் காட்சி மதுரையில் 3.02 நிமிடம், தஞ்சையில் 3.22 நிமிடம், கோவில்பட்டியில் 7.40 நிமிடங்கள், நெல்லையில் 8.51 நிமிடங்கள், தூத்துக்குடியில் 9.39 நிமிடங்கள், நாகர்கோவிலில் 9.46 நிமிடங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கருங்குளத்தில் 9.58 நிமிடங்கள் நன்றாக தெரியும். மொத்தத்தில் 4 மணிநேரம் தெரியும்.
எப்படி பார்க்கவேண்டும் என்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரெபூட் இன்போடெக் நிறுவனம்
www.pongaleclipse.com என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இது ஆங்கிலம் மற்றும் தமிழில் தெரியும். ஆங்கில இணையதளத்தை சென்னை அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் தொடங்கிவைத்தார். தமிழ் இணையதளத்தை பிர்லா கோள் அரங்க நிர்வாக அதிகாரி லெனின் தமிழ் கோவன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ரெபூட் இன்போடெக் நிறுவன மேலாண் இயக்குனர் அகமது மீரான் தலைமை தாங்கினார்.
கிரகணத்தை வெறும் கண்ணால்பார்க்கக்கூடாது. இதற்காக விற்கப்படும் கண்ணாடிகளை வாங்கி பார்க்கலாம். வெல்டிங் செய்யும்போது பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி மூலம் கிரகணத்தை பார்க்கலாம்.
விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தீவுத்திடல் பொருட்காட்சியிலும், பச்சையப்பன் கல்லூரி எதிரே நடைபெற உள்ள புத்தக கண்காட்சியிலும் ரெபூட் இன்போடெக் நிறுவனம் சார்பில் தனி அரங்குகள் ஏற்படுத்தப்படுகிறது. பிர்லா கோள் அரங்கம் சார்பில் கங்கண சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பது குறித்து பொதுமக்களிடம் பரப்புவதற்காக 250 ஆசிரியர்களுக்கும், 750 மாணவர்களுக்கும் கன்னியாகுமரியில் ஜனவரி மாதம் 14, 15, 16 தேதிகளில் நாகர்கோவிலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக