சனி, 19 டிசம்பர், 2009

கோத்ரா ரயில் எரிப்பு - நானாவதி கமிஷன் 12வது முறை நீட்டிப்பு


கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற வன்முறைகள் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நானாவதி கமிஷனின் பதவி காலம் 12வது முறையாக மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ல் நடைபெற்ற ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பெரும் வன்முறை நடைபெற்றது. இது பற்றி விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி.ஷா தலைமையிலான கமிஷனை குஜராத் அரசு 2002, மார்ச் 6ம் தேதி அமைத்தது. பின்னர், 2002ம் ஆண்டு மே மாதம் இந்த கமிஷனில் ஓய்வு பெற்ற நீதிபதி நானாவதியும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2008ம் ஆண்டு ஷா இறந்ததை தொடர்ந்து இந்த கமிஷனில் நீதிபதி மேத்தா நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு தனது முதல்கட்ட அறிக்கையை குஜராத் அரசிடம் கமிஷன் சமர்ப்பித்தது. அதில், ரயில் எரிப்பு சம்பவம் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சதித் திட்டம் என்றும், அது தற்செயலாக நடந்த விபத்து அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
நானாவதி கமிஷனின் பதவி காலம் இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, இதன் பதவி காலத்தை 2010, ஜூன் 30ம் தேதி வரை குஜராத் அரசு நேற்று நீட்டித்து உத்தரவிட்டது. கமிஷனின் பதவி காலம் ஏற்கனவே 11 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கமிஷன் தனது இறுதி அறிக்கையை தீவிரமாக தயாரித்து வருவதால், இப்போது செய்யப்பட்டதே கடைசி நீட்டிப்பாக இருக்கும் என்று குஜராத் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:

கருத்துரையிடுக