ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அக்கோரிக்கை தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் அவர்களின் தொடர் உண்ணாவிரதமும் , அதையொட்டிய போராட்டங்கள் வன்முறை சம்பவங்கள் தற்கொலை நிகழ்வுகள் என சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக ஆந்திராவை ஆட்டிப்படித்ததை கண்ட மத்திய அரசு அசுர கதியில் ஆலோசனை செய்து இந்தியாவிற்கு நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது போன்று, தெலுங்கானா கோரிக்கையை ஏற்பதாகவும், அது தொடர்பாக ஆந்திர சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தது.
இந்த அறிவிப்பின் மூலம் ஆந்திராவில் அமைதி திரும்பும் என்று கருதிய மத்திய அரசு இப்போது பல்வேறு முனை தாக்குதலை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலாவதாக மத்திய காங்கிரஸ் அரசின் தனி தெலுங்கானா ஆதரவு நிலைப்பாட்டை ஆந்திர மாநில காங்கிரசே ஏற்காததுதான் வேடிக்கை. அதுமட்டுமன்றி மத்திய அரசின் தனி தெலுங்கானா ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிராக, மாநிலத்தில் அரசியல் கட்சி வேறுபாடு தாண்டி ஒரு ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரும் எம்.பி.க்களில் சிலரும் ராஜினாமா செய்துள்ளனர். அதோடு தெலுங்கானாவுக்கு எதிராக போராட்டமும் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. அதோடு, தனி தெலுங்கானா உருவாக்கப்பட்டால், ஆந்திராவின் சித்தூர்-நெல்லூர்-கர்னூல்-அனந்தபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து 'ராயலசீமா' என்ற மாநிலம் உருவாக்கபடவேண்டும் என்ற கோரிக்கையும், தெலுங்கானாவில் ஐதராபாத்தை இணைக்காமல், ஐதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் ஒரு சாராரால் முன்வைக்கப்பட்டுள்ளது.இது ஒருபுறமிருக்க, பல்வேறு அரசின் தெலுங்கானா ஆதரவு நிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தனி மாநில கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-பாண்டிச்சேரியில் காரைக்கால் புறக்கணிக்கப் படுவதாகவும் எனவே காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கவேண்டும். மராட்டியத்தை பிரித்து 'விதர்பா' என்ற தனி மாநிலம் உருவாக்கபப்டவேண்டும்.
-மேற்கு வங்காளத்தை பிரித்து 'கூர்க்கா' மாநிலம் உருவாக்கப்பட வேண்டும்.
-உ.பி.யை இன்னும் இரண்டாக்கி 'பண்டல்கண்ட்' மற்றும் 'ஹரித்' அல்லது கிஷான் மாநிலம் உருவாக்கப்படவேண்டும்.
-பீகார் மாநிலம் பிரிக்கப்பட்டு 'போடோலேண்டு' மாநிலம் உருவாக்கப்படவேண்டும்.
-மேற்கு வங்கம் மற்றும் அசாமின் சில பகுதிகளை சேர்த்து 'கிரேட்டர் கூச் பெகார்' என்ற மாநிலம் உருவாக்கப்படவேண்டும்.

0 comments:
கருத்துரையிடுக