வெள்ளி, 15 ஜனவரி, 2010

ஹைட்டி பூகம்பம்: பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது!


ஹைட்டி பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இடிபாடுகளுக்கிடைய சிக்கி இருப்போரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பூகம்பத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிக்காகவும், மறு சீரமைப்புப் பணிக்காகவும் 3,500 இராணுவத்தினரையும், 2,200 கடற்படையினரையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிரெஞ்சு அதிபர் சர்கோசியும் பிரேசில், கனாடா மற்றும் சில நாடுகளுடன் இணைந்து ஹைட்டியின் மறுசீரமைப்புப் பணி குறித்து ஆலோசனை செய்வார்கள் என பிரான்சு அரசு அறிவித்துள்ளது.
இந்த பூகம்பத்தில் சுமார் 30 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என செஞ்சிலுவைச் சங்கம் உத்தேசித்துள்ளது. பூகம்பத்தில் சுமார் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால் பலியானோர் எண்ணிக்கை 1 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.
மிகப்பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஹைட்டிக்கு உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் உதவிகளை அறிவித்துள்ளன. அமெரிக்கா 100 மில்லியன் டாலர் உதவித் தொகையை அறிவித்துள்ளது. அவசர உதவியாக 100 மில்லியன் டாலர்களை உலக வங்கி அறிவித்துள்ளது. குவைத் 1 மில்லியன் டாலர் உதவித் தொகையை அறிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக