வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

தாயின் பேச்சில் இருந்து கருவில் இருக்கும்போதே 2 மொழிகள் அறிய முடியும்

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக மனவியல் விஞ்ஞானிகள், பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஆராய்ச்சியாளர் ஒருவர் இணைந்து கருவிலிருக்கும் குழந்தைகளின் மொழித் திறன் பற்றி விரிவான ஆராய்ச்சி நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
தாயின் பேச்சு மொழியை கருவில் இருக்கும் குழந்தை கேட்டறியும் திறன் கண்காணிக்கப்பட்டு, குழந்தை பிறந்ததும் பரிசோதிக்கப்பட்டது. அதற்காக 2 பிரிவாக கர்ப்பிணிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு பிரிவினர் வெறும் ஆங்கிலம் மட்டும் பேச கேட்டுக் கொள்ளப்பட்டனர். மற்றொரு பிரிவினர், ஆங்கிலத்துடன் வேறு மொழி பேச வைக்கப்பட்டனர். முதல் கட்ட சோதனையில் இரண்டு பிரிவு கர்ப்பிணிகளும் 10 நிமிடங்களுக்கு ஆங்கிலம், வேறு ஒரு மொழியை மாறி மாறி பேச வைக்கப்பட்டு குழந்தையின் கேட்டறியும் திறன் பரிசோதிக்கப்பட்டது. ஆங்கிலம் மட்டும் பேசி வந்த கர்ப்பிணியின் கருவில் இருந்த குழந்தை அந்த மொழியில் ஆர்வம் காட்டியது.
இரண்டு மொழிகளை கேட்டு வந்த குழந்தை, ஆங்கிலம் மற்றும் வேறு மொழி இரண்டுக்கும் சமமான ஆர்வத்தை காட்டியது. அதன்மூலம், இரு மொழி பேசும் பெற்றோரின் குழந்தைகள் அதற்கேற்ப கருவிலேயே தயாராகி விடுவது உறுதியானது. இந்த குழந்தைகள் வளரும்போது இரண்டு மொழிகளுக்கு இடையே வித்தியாசத்தை எளிதாக அறிந்து குழப்பமின்றி பேசுவார்கள். இவ்வாறு ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக