ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

நாளை முதல் +2 தேர்வுகள் தொடக்கம்

+2 தேர்வு வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி மார்ச் 22-ந்தேதி முடிவடைகிறது. 5233 பள்ளிகளில் இருந்து மொத்தம் 6,89,687 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 3,22,381 பேர் மாணவர்கள், 3,67,306 பேர் மாணவியர். இந்த வருடம் தேர்வு எழுதும் மாணவர்களைவிட மாணவியர் எண்ணிக்கை 44,925 பேர் அதிகம். கடந்த ஆண்டைவிட இப்போது 17,481 மாணவர்களும், 24,574 மாணவிகளும் கூடுதலாக தேர்வு எழுதுகிறார்கள். தனித்தேர்வர்கள் 53,564 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
பிளஸ்-2 தேர்வுக்காக தமிழகம்,புதுச்சேரியில் 1809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 137 தேர்வு மையங்களில் 48,730 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். புதுச்சேரியில் 30 தேர்வு மையங்களில் 12,588 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். கண் பார்வையற்றோர், காது கேளாதோர்- வாய் பேசாதோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான தேர்வு எழுதுவோருக்கு ஒரு மொழி பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணி நேரம் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் திடீர் சோதனை நடத்துவார்கள். தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 10-வது வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 23-ந்தேதி முதல் ஏப்ரல் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 8,56,966 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தனியாக 99,353 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
மெட்ரிக்குலேசன் தேர்வு மார்ச் 23 முதல் ஏப்ரல் 9-ந்தேதிவரை நடக்கிறது. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,492 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். 1,593 மாணவ-மாணவிகள் ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகிறார்கள். 10-வது வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மொத்தம் 2,791 மையங்களில் நடக்கிறது. புழல் சிறையில் 4 கைதிகள் பிளஸ்-2 தேர்வும், 18 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் எழுதுகிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக