வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
தமிழகத்தில் போலி ரயில் டிக்கெட்டுகள்! அதிர்ச்சியில் அதிகாரிகள்
கோவை : போலி ரயில் டிக்கெட் தயாரித்து நாடு முழுவதும் பயணம் செய்த, வடமாநில ஆசாமிகள் மூவர், கோவையில் கைது செய்யப்பட்டனர். இம்மோசடியில் ரயில்வே ஊழியர்கள் உடந்தையா என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.போலி ரயில் டிக்கெட்டில் பலர் பயணம் செய்வதாக, சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களையும் கண்காணிக்கும்படி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கோவை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துச்சாமி, பிலிப் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். இதில், டிக்கெட்டை கேன்சல் செய்ய வந்த சந்தேக நபர்கள் பீகாரைச் சேர்ந்த வீரமணி மோத்தி(25) சுசீந்தர்தாஸ்(35) ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன்குமார் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மிகக்குறைந்த தூரம் உள்ள ஊர்களுக்கு செல்ல டிக்கெட் வாங்கி, அதில் உள்ள ஊர், தூரம் மற்றும் கட்டணத்தை சுரண்டி எடுத்து, அதிக தூரம் உள்ள டில்லி, சென்னை, கோல்கட்டா பெயர்களையும், அதற்கான கட்டணத்தையும் கம்ப்யூட்டர் மூலம் அச்சிட்டு விற்பனை செய்து வந்ததை ஒப்புக் கொண்டனர். மேலும் இம்மூவரும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயண சீட்டு வாங்காமல் ரயில் பயணம் மேற்கொண்டதும் தெரிந்தது. போலி ரயில் டிக்கெட் அச்சடிப்பில் இவர்கள் மட்டும் ஈடுபட்டிருந்தனரா அல்லது ரயில்வே ஊழியர்கள் யாரேனும் உடந்தையாக இருந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
போலி டிக்கெட் தயாரித்து, விற்பனையில் ஈடுபட்டு, ரயில்வே நிர்வாகத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்திய இச்சம்பவம், சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக