செவ்வாய், 30 மார்ச், 2010
ஹைதராபாத்தில் பெரும் வன்முறை- இருவர் பலி - ஊரடங்கு அமல் - கண்டதும் சுட உத்தரவு!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வெடித்துள்ள மதக் கலவரம் வேகமாகப் பரவி வருகிறது. வன்முறைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் போலீஸ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கண்டதும் சுடும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பழைய ஹைதராபாத் பகுதியில்தான் பெரும் பதட்டம் நிலவுகிறது. அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் பதட்டமான பகுதிகளில் 1800 புற ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கண்டதும் சுடும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று சலிபந்தா என்ற இடத்தில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். இன்னொருவர் படுகாயமடைந்தார். அவர் இன்று காலை உயிரிழந்தார்.
மொஹல்புரா, சலிபந்தா, சார்மினார், அலியாபாத், லால் தர்வாஜா ஆகிய பகுதிகளில் பெரும் பதட்டம் நிலவுகிறது. தென் மண்டலத்தின் 17 காவல் நிலையங்களுட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாக மாநில டிஜிபி கிரிஷ்குமார் கூறியுள்ளார். நிலைமையை மாநில அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வன்முறையைத் தூண்டி வருவோரை போலீஸார் கடுமையாக அடக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாநில காவல்துறை அமைச்சர் சபீதா ரெட்டி கூறியுள்ளார்.
இதற்கிடையே, டெல்லியிலிருந்து கூடுதலாக 700 சிஆர்பிஎப் மற்றும் 30 சிஐஎஸ்எப் வீரர்கள் ஹைதராபாத் விரைந்து செல்வதாக உள்துறை அமைச்சக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் 36 பேர் காயமடைந்தனர். 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசு மாடுகள் வெட்டப்பட்டன..
கலவரத்தின் ஒரு பகுதியாக பேகம்பஜார், முகாபவுலி உள்ளிட்ட இடங்களில் இருந்த கோசாலைகளில் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளை சிலர் வெட்டிக் கொன்றதால், மேலும் பதட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக இன்னொரு தரப்பினரும் பெரும் வன்முறையில் குதித்ததால்தான் ஹைதராபாத் போர்க்களமாக மாறியுள்ளது. சில இடங்களில் கலவரக்காரர்கள் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை அடித்து தாக்கியுள்ளனர். பல வீடுகளில் ஆடம்பரப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். பல கடைகளையும் உடைத்து பொருட்களை சூறையாடினர்.
0 comments:
கருத்துரையிடுக