புதன், 31 மார்ச், 2010

ஹஜ் பயணம்: சென்ற ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை - ஐஎன்டிஜே கோரிக்கை.


துல்ஹஜ் மாதம் ஹஜ் புனித யாத்திரை நிறைவேற்றுவது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ஆண்டுக்காண்டு பல லட்சம் மக்கள் மக்காவில் கூடி தங்கள் புனிதக் கடமையை நிறைவேற்றுகின்றனர். ஹஜ் பயணிகளை பராமரிப்பதற்கும், அவர்களுக்கு உரிய வசதிகளை நிறைவேற்றித் தருவதற்கும் ஸவூதி அரேபிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஹஜ் புனித யாத்திரையில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிறகும் குறிப்பிட்ட எண்ணிக்கையை ஸவூதி அரசு நிர்ணயித்துள்ளது. அதனடிப்படையில் தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் அதிகமான அளவில் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பம் வருவதால் ஹஜ் கமிட்டி குலுக்கல் முறையில் ஹஜ் பயணிகளை தேர்ந்தெடுத்து வருகிறது.
விண்ணப்பிக்கப்பட்ட எல்லா விண்ணப்பங்களும் மொத்தமாக சேர்த்து குலுக்கப்படுவதால், தொடர்ந்து பல ஆண்டுகளாக விண்ணப்பித்து வந்த போதிலும் ஒரு சிலருக்கு அனுமதி கிடைப்பதில்லை. சில நேரங்களில் அனுமதி கிடைக்கப் பெற்று ஹஜ் புனித யாத்திரை முடித்தவர்கள் மறுபடியும் அடுத்த ஆண்டு விண்ணப்பிக்கும் போது குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் ஹஜ் புனித யாத்திரையில் கலந்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது.
முதலாமாண்டுகளில் விண்ணப்பித்து குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சமுதாய மக்களிடையே நிலவி வருகிறது. இது மட்டு மல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட தனியார் ஹஜ் நிறுவனங்கள் அதிக தொகை வசூலிக்கும் நிலை இருந்து அதனை நாடும் நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக இக்குறைகளை சரி செய்யுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கரிடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் எம்.ஐ. முஹம்மது முனீர், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம். ஸையத் இக்பால், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மொய்தீன் ஆகியோர் தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் பிரசிடென்ட் அபூபக்கரை நேரில் சந்தித்து மனுவை அளித்தனர்.
தொடர்ந்து இது சம்பந்தமாக ஐஎன்டிஜே நிர்வாகிகள் அளித்த விளக்கங்களை நிதானமாக கேட்டுக் கொண்ட ஹஜ் கமிட்டி தலைவர் அதனை வலியுறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகத் தெரிவித்தார். தமிழக ஹஜ் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரசிடென்ட் அபூபக்கர் கூடுதல் பொறுப்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும் இந்தப் பொறுப்புக்கு முதன்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக