வியாழன், 1 ஏப்ரல், 2010

கார்கரேயின் கவச உடை ஏகே47 குண்டுகளை தடுக்கக்கூடியவை அல்ல


கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய போது அதை எதிர்த்து போராடிய போலீசார் அணிந்திருந்த கவச உடைகள் ஏகே 47 ரக துப்பாக்கி குண்டுகளை தாங்கக்கூடியவை அல்ல என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தீவிரவாதிகள் மும்பைக்குள் புகுந்து பல்வேறு இடங்களில் பொதுமக்களின் உயிர்களை சூறையாடிக் கொண்டிருந்தனர்.  மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்று குவித்த தீவிரவாதிகள் காமா மருத்துவமனையில் இருப்பதாக மஹாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரேக்கு தகவல் வந்தது.  இதையடுத்து காமா மருத்துவமனை நோக்கி கார்கரே விரைந்தார். அப்போது அவரின் ஜீப்பில் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், ஏசி அஷோக் காம்தே ஆகியோர் உடன் சென்றனர். அவர்களை நோக்கி மருத்துவமனை பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதி அஜ்மல் கசாப் ஏகே47 துப்பாக்கியால் தாறுமாறாக சுட்டான்.
இதில் போலீசார் மூவரும் வீரமரணம் அடைந்தனர். முன்னதாக குண்டடி பட்ட மூன்று அதிகாரிகளும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, கார்கரேயின் உடலில் இருந்த குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை காணாமல் போயிருந்தது. இதுபற்றி பின்னர், கார்கரேயின் மனைவி கேள்வி எழுப்பிய போது, கார்கரேயின் கழுத்து உள்ளிட்ட பகுதியில் குண்டு துளைத்ததால் தான் உயிர் இழந்தார் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட கவச உடைகள் பழுதானவை என்று கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கையில், 'கார்கரே உள்ளிட்ட மூன்று போலீசாரும் அணிந்த கவச உடைகள் கடந்த 2001ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. அந்த கவச உடைகள் 9எம்எம் பிஸ்டல் துப்பாக்கி குண்டுகளில் இருந்து மட்டுமே பாதுகாப்பு அளிக்கக்கூடிவை. ஏகே47 ரக துப்பாக்கி குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் அந்த கவச உடை தயாரிக்கப்படவில்லை' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'எனினும் கார்கரே பலியானதற்கும் கவச உடை பிரச்னைக்கும் தொடர்பில்லை. துப்பாக்கி குண்டு கழுத்துப் பகுதியில் துளைத்ததால் தான் அவர் இறந்தார். இதனால் அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடையால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியாது' என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

0 comments:

கருத்துரையிடுக