சனி, 8 மே, 2010

கடந்த ஆண்டில் தமிழகத்தில் காதல் விவகாரத்தில் 217 கொலைகள்!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 1,644 கொலைகள் நடந்துள்ளன. சட்டசபையில் உள்துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்புகளை முதல்வர் கருணாநிதி சார்பாக துணை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் 2009ம் ஆண்டு மொத்தம் 1,644 கொலைகள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 14 அதிகம்.

கொலைக்கான காரணங்கள்: குடும்ப சண்டை- 453, வாய்த் தகராறு- 372, சொந்தப் பகை- 282, காதல் விவகாரம்- 217, பண பரிமாற்றம்- 68, நிலத் தகராறு- 102, குடிபோதையில் தகராறு- 96, அரசியல் காரணங்கள்- 4, பிற தகராறுகள் (கண்டுபிடிக்கப்படாதவை)- 46, சாதி பாகுபாடு- 4.

9,000 காவலர்கள் தேர்வு:

கடந்த ஓராண்டிலும் சாதி அல்லது மதப் பூசல்கள் எதுவும் பெரிய அளவில் நிகழவில்லை. தமிழகத்தில் தீவிரவாதிகள் காலூன்ற முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டில் நடந்த 21,297 குற்ற வழக்குகளில் 16,830 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரூ.80.26 கோடி மதிப்பிலான களவு போன சொத்துக்களில் ரூ.56.80 கோடி மதிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,492 நடந்துள்ளன. 60,794 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 13,746 பேர் மரணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 8 லட்சம் வாகனங்கள் அதிகரித்துள்ளன. சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 9,000 காவலர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புப் படையக்கு 699 பேரை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2006 ஜனவரி முதல் 24,695 இலங்கை தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். சுமார் 70,000 அகதிகள் 113 அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி: தட்ஸ் தமிழ் 

0 comments:

கருத்துரையிடுக