சனி, 15 மே, 2010

நாகர்கோவில் அருகே தவறான சிகிச்சை 9 மாத குழந்தை பலி.

நாகர்கோவில் அருகே போலி டாக்டர் ஒருவர் தவறான ஊசி ஏற்றியதில் 9 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிளினிக் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். போலி டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் வீராணி தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் லிங்கம் (30). கூலி தொழிலாளி. இவருக்கு ராதிகா என்ற மனைவியும், சங்கனா (2), சர்மி (9மாதம்) என இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக சர்மிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று (வெள்ளி) காலை காதை பிடித்தவாறு குழந்தை அழுது கொண்டே இருந்தது. இதனால் வீட்டு அருகில் கிளினிக் நடத்தி வரும் முருகேசன் என்பவரிடம் குழந்தையை ராதிகா அழைத்து சென்றார். சர்மியை பரிசோதித்த அவர் ஊசி ஒன்றை போட்டு அனுப்பி வைத்தார். மாத்திரைகளையும் கொடுத்து அனுப்பினார். ஆனால் குழந்தையின் அழுகை நிற்க வில்லை. மாலையில் குழந்தைக்கு கடும் காய்ச்சல் வந்தது. தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், மீண்டும் அதே கிளினிக்கிற்கு குழந்தையை ராதிகா கொண்டு சென்றார்.


இந்த முறை காய்ச்சல் அதிகமாக உள்ளது எனக்கூறி அதற்காக மீண்டும் ஒரு ஊசி போட வேண்டும் எனக்கூறி குழந்தைக்கு 2&வதாக ஊசி போடப்பட்டது. ஊசி ஏற்றி சில நிமிடங்களிலேயே சுயநினைவு இல்லாத நிலைக்கு சென்ற குழந்தை சர்மி, சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது.
தனது மடியிலேயே மகள் பிணமானதை பார்த்து ராதிகா கதறி அழுதார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிளினிக் முன் குவிந்தனர். பொதுமக்கள் திரண்டதும் கிளினிக்கில் இருந்த ஊழியர்கள் சிலர் ஓட்டம் பிடித்தனர். டாக்டராக இருந்த முருகேசனும் ஓட முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து சிறை வைத்தனர். சிலர் ஆத்திரத்தில் கிளினிக் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் ஏ.எஸ்.பி. அபிஷேக் தீட்சித், இரணியல் போலீசார் விரைந்தனர். டாக்டராக இருந்த முருகேசனை இரணியல் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் முருகேசன் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. ஆர்.ஐ.எம்.பி. எனப்படும் பரம்பரை வைத்திய முறைக்கான சான்றிதழ் படிப்பு முடித்தார். அலோபதி (ஆங்கில மருத்துவம்) தொடர்பான சிகிச்சை அளிக்க இவருக்கு அனுமதி இல்லை. ஆனால் முருகேசன் அந்த பகுதியில் சுமார் 8 வருடங்களாக எம்.பி.பி.எஸ். முடித்தவர் போல், சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கி உள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பலியான குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
   

0 comments:

கருத்துரையிடுக