ஞாயிறு, 30 மே, 2010

"தள்ளுபடி செய்த குடும்ப அட்டைதாரர்கள் நாளை வரை மேல்முறையீடு செய்யலாம்'

கன்னியாகுமரி மாவட்டத்தில் தணிக்கையின்போது தள்ளுபடி செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இம் மாதம் 31-ம் தேதிக்குள் மேல்முறையீட்டு மனு அளிக்கலாம் என்று ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளை 100 சதவிகிதம் வீடு வீடாகச் சென்று தணிக்கை செய்யும் பணி முடிவடைந்துள்ளது. தணிக்கையின்போது குடியிருப்பு இல்லாத மற்றும் முகவரி மாறிய குடும்பங்களின் குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. அவ்வாறு பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் 25081 பேர் மேல்முறையீடு மனு செய்தனர். 

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, தகுதியில்லாத குடும்ப அட்டைகள் மற்றும் முறையீடு பெறப்படாத குடும்ப அட்டைகளுக்கு வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரத்து செய்து ஆணை வழங்கப்பட்டது. இதற்கான பட்டியல் கடந்த 3.5.2010 முதல் ரேஷன் கடைகளில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு மேல்முறையீடு மனு செய்யலாம். மேல்முறையீடு மனுக்கள் இம் மாதம் 31-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளப்படும். 
 மேல்முறையீடு மனுக்களை மாவட்ட வழங்கல் அலுவலகம் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இதுகுறித்து சந்தேகம் இருந்தால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தொலைபேசி 04652-278035-க்கு தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

0 comments:

கருத்துரையிடுக