வெள்ளி, 7 மே, 2010

மணவாளக்குறிச்சி: வரதட்சணை கொடுமை இளம்பெண் போலீசில் புகார்

ணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தை சேர்ந்த மதர்நிஷா(27) மாநில சிறுபான்மையினர் மனித உரிமை கவுன்சில் தலைவர் மீரான் மைதீன் உதவியுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும், குளச்சல் காவடி விளையை சேர்ந்த அன்சாருக்கும்(34) கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது தந்தை 25 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்தார். திருமணமாகி சில காலம் சந்தோஷமாக வாழ்ந்தோம். எங்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. நாளடைவில் அவர் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது அவரது குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். எனது நகைகளையும் விற்று ஊதாரித்தனமாக செலவு செய்தார். ஒரு கட்டத்தில் சித்ரவதை தாங்க முடியாமல் நான் எனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டேன். சில நாள் கழித்து எனது கணவர் மீண்டும் வந்து எனது தந்தையிடம் இனிமேல் நான் மனைவியையும், குழந்தைகளையும் ஒழுங்காக வைத்துக் கொள்கிறேன். எங்களுக்கு ஒரு தனி வீடு எடுத்து தாருங்கள் என்றார். எனது தந்தையும் ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து குடியமர்த்தினார்.
சில நாட்கள் கழித்து அவரது குடும்பத்தினரின் பேச்சை கேட்டு மது அருந்த விட்டு வந்து என்னையும், குழந்தைகளையும் அடித்து உதைத்து துன்புறுத்தினார். மண்எண்ணை எடுத்து என் மீது ஊற்றி தீ வைத்து கொளுத் தினார். எப்படியோ நான் அந்த விபத்தில் இருந்து உயிர் தப்பினேன். இதுதொடர்பாக நான் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தேன். அதன்பின்னரும் அவர் தொடர்ந்து என்னையும், குழந்தைகளையும் சித்ரவதை செய்தார். இதுகுறித்து நான் அவரது குடும்பத்தினரிடம் முறையிட்டேன். அவர்களோ நீயும், குழந்தைகளும் செத்து விட்டால் தான் எங்களுக்கு நிம்மதி என்று கூறி துரத்தி விட்டனர்.
தற்போது நீண்ட நாட்களாக கணவர் வீட்டிற்கு வருவதில்லை. விசாரித்த போது எனது கணவருக்கு வேறு இடத்தில் பெண் பேசி திருமணம் நடத்துவதற்கு முயற்சி நடத்தி வருவதாக அறிந்தேன். எனவே எனது கணவர் மற்றும் அவரது குடும் பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக