சனி, 5 ஜூன், 2010
அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா தனியார் பள்ளிகளில் சோதனை.
அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா என்று
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில், முதன்மைக் கல்வி அதிகாரிகள் அதிரடி சோதனை
நடத்தி வருகின்றனர். அரசு உத்தரவை மீறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக சுயநிதி பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக நீண்ட
காலமாக புகார்கள் குவிந்து வந்தன. அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், சுயநிதி
பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன்
தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு, மொத்தம் உள்ள 10,934 பள்ளிகளுக்கும்
தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்து கடந்த 7ம் தேதி அறிவித்தது. இதில் குறைகள்
இருந்தால், உத்தரவு பெற்ற 15 நாட்களுக்குள் குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம் என
அறிவிப்பு வெளியானது. இதுவரை இந்தக் குழுவிடம் 6,300 பள்ளிகள் மேல்முறையீட்டு மனு
அளித்துள்ளன. மனுக்களை ஆய்வு செய்ய 14 ஆடிட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நீதிபதி கோவிந்தராஜன் கூறுகையில், ‘’எந்தெந்த
பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோமோ, அந்த கட்டணத்தைதான் பள்ளிகள்
வசூலிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆய்வு நடத்தி முடிக்கும் வரை,
குழு நிர்ணயித்த கட்டணத்தைதான் வாங்க வேண்டும். அதிகம் வசூலித்தால் பள்ளி
அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதிக கட்டணம் வசூலிப்பது
குறித்து குழுவிடம் பெற்றோர் புகார் செய்யலாம்” என்று எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து பெற்றோர் பலர் கட்டணக் குழுவுக்கு
தொலைபேசியில் புகார்கள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமாக வரும் புகார்கள் மீதுதான்
விசாரணை நடத்தப்படும் என்று கட்டணக் குழு தெரிவித்தது. அதன்பின், நேற்றுமுன்தினம் 5
பேரும் நேற்று 4 பேரும் எழுத்து பூர்வமாக புகார் தெரிவித்தனர். தகவல் பெறும் உரிமை
சட்டத்தின் கீழ், கட்டணம் குறித்த விவரங்களை 3 பேர் கேட்டுள்ளனர். இந்த புகார்களில்
தெரிவிக்கப்பட்ட பள்ளிகளில் 2 நாட்களாக கட்டணக் குழு அதிகாரிகள் அதிரடி சோதனை
நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமன்றி, அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா என்று
தமிழகம் முழுவதும் எல்லா தனியார் பள்ளிகளிலும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும்
மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்களும் சோதனை நடத்தத் தொடங்கியுள்ளனர். அதிலும்
குறிப்பாக புகார்கள் வந்தால் அந்தப் பள்ளிகளில் உடனடியாக சோதனை நடத்த வேண்டும்
என்று அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், அதிக கட்டணம்
வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக பெற்றோரும் மாணவர்களும் பல இடங்களில்
ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், தனியார் பள்ளிகளில்
தீவிர சோதனை செய்ய நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் சில
பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரின்படி, மெட்ரிக் பள்ளி இயக்குநர்
தலைமையில் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேற்றுமுன்தினம் திடீர் சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது அரசு நிர்ணயித்த கட்டணத்தையும், அந்த பள்ளியில் வசூலித்த
கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். அதிக கட்டணம் வசூலித்த பள்ளி நிர்வாகத்திடம்
விளக்கம் கேட்டு எழுதி வாங்கியுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக