ஞாயிறு, 7 நவம்பர், 2010
ஒபாமா வருகை: இந்திய ஒப்பந்தங்களால் அமெரிக்காவில் உருவாகும் 60,000 புதிய வேலைகள்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார். முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் இந்தியா புறப்பட்டார் ஒபாமா. வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.
இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொலபா கடற்படைத் தளத்துக்குச் சென்ற ஒபாமா அங்கிருந்து காரில் தாஜ் ஹோட்டல் சென்றார். அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் இரண்டு நாட்கள் ஒபாமா தங்கியிருப்பதால் சத்ரபதி சிவாஜி மார்க், ஆதம் தெரு, பூஷன் மார்க், ராம்சந்தானி மார்க், நவரோஜி பர்துன்ஜி ரோடு, பெஸ்ட் மார்க் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் காயமடைந்தோருடன் சந்திப்பு:
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது தாஜ் ஹோட்டலில் காயமடைந்தவர்களை ஒபாமா சந்தித்தார்.
காஷ்மீரிலும் பலத்த பாதுகாப்பு:
அமெரிக்க அதிபரின் வருகையி்ன்போது காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் அதிகரிக்கலாம் என்பதால் அங்கும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவால் அமெரிக்காவில் 60,000 புதிய வேலைகள்:
இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது.
மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன. இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அவுட்சோர்சிங் விவகாரத்தில் இந்தியாவுக்கு பணிகளை ஏற்றுமதி செய்வதை ஒபாமா கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனையை ஒபாமாவிடம் கிளப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்துக்கு இந்தப் பயணத்தின்போது தீர்வு ஏதும் கிடைப்பது சந்தேகமே.
அமெரிக்காவில் செனட் சபைக்கு நடந்த இடைத் தேர்தலில் ஒபாமாவுக்கு பலத்த அடி விழுந்து, எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரத் தேக்கமும் வேலைவாய்ப்பின்மையுமே முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் அவுட்சோர்சிங் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒபாமா சலுகை ஏதும் காட்ட வாய்ப்பில்லை.
ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.
தட்ஸ்தமிழ்
0 comments:
கருத்துரையிடுக