செவ்வாய், 14 டிசம்பர், 2010
ரகசிய வங்கிக் கணக்குகளில் உள்ள கறுப்புப் பணம்: தகவல் தர 10 நாடுகள் சம்மதம்!.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் தொடர்பான விவரங்களை அளிக்க சுவிட்ஸர்லாந்து உள்பட 10 நாடுகள் சம்மதித்துள்ளன. இந்தத் தகவலை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. சுவிட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் ரகசிய வங்கி கணக்குகளை தொடங்கி, அவற்றில் தாங்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த (கறுப்பு) பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்து இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியர்களின் வெளிநாட்டு ரகசிய வங்கி கணக்குகள் குறித்த விசாரணையை மத்திய நிதி அமைச்சகம் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக, 100 இந்தியர்களின் ரகசிய வங்கி கணக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தத் தொகை மட்டும் ரூ 70 லட்சம் கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் சட்ட மந்திரி ராம்ஜெத்மலானி, பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில், பாராளுமன்ற மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், "வெளிநாட்டு ரகசிய வங்கி கணக்குகளில் இந்தியர்களின் ரூ.70 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது. அதை இந்தியாவுக்கு கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் இலவசமாக கொடுக்கலாம். அந்தப் பணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்..." என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், "வெளிநாடுகளில் ரகசிய வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் பாதுகாப்பு அளிக்கிறது. அதன்படி, ரகசிய வங்கி கணக்கு குறித்த தகவல்களை, வெளிநாட்டு வங்கிகள் யாருக்கும் தெரிவிக்க வேண்டியது இல்லை. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை திருத்தும் வகையில், கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி, சுவிட்ஸர்லாந்தில் உள்ள அரசு அமைப்புகளுடன் ஒரு உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம், ரகசிய வங்கி கணக்கு குறித்த தகவல்களை இந்தியா பெறலாம். சுவிட்ஸர்லாந்து மற்றும் 9 நாடுகள், தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கறுப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. மேலும், 22 நாடுகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்..." என்று கூறியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக