சனி, 11 டிசம்பர், 2010
அயோத்தி தீர்ப்புக்கு பிப். 15 வரை தடை லக்னோ சிறப்பு பெஞ்ச் உத்தரவு.
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பை அமல்படுத்த விதிக்கப்பட்ட தடையை பிப்ரவரி 15ம் தேதி வரை லக்னோ சிறப்பு பெஞ்ச் நீட்டித்தது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லாலா விராஜ்மான் அமைப்புகளுக்கு பிரித்து வழங்கும்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய லக்னோ பெஞ்ச் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு அளித்தது. இதில் திருப்தி இல்லாத மனுதாரர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, இந்த தீர்ப்பை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும்படி லக்னோ சிறப்பு பெஞ்ச்சில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், வி.கே. தீட்சித் ஆகியோர் இதை விசாரித்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பை அமல்படுத்த விதிக்கப்பட்ட 3 மாத தடையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை, அயோத்தியில் இப்போதுள்ள நிலைமையே நீடிக்க வேண்டும் என்றனர். மேலும், வழக்கை அடுத்த மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
0 comments:
கருத்துரையிடுக