வியாழன், 2 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் நிறுவனரை கைது செய்ய இன்டர்போல் வாரண்ட்!

லட்சக்கணக்கான ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவை பெரும் சிக்கலுக்கும் தலைகுனிவுக்கும் உள்ளாக்கியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அஸாங்கேயை கைது செய்வதற்காக சர்வதேச போலீஸ் வாரண்ட் பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ, ராஜாங்க ரகசியங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜுலியன் அசாங்கேதான் இதை நிறுவியவர். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை பற்றிய ரகசியங்களையும், அந்த நாட்டு தலைவர்களை பற்றி அமெரிக்கா அடித்த மட்டமான கமெண்டுகள் மற்றும் ரகசியங்களை வெளியிட்டு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது நட்பு நாடுகளைப் பற்றியும், தலைவர்கள் குறித்தும் கூட அமெரிக்கா படு கேவலமாக அடித்த கமெண்டுகள் வெளியானதில் அமெரிக்கா தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளது.
இவற்றை வெளியிட வேண்டாம் என்று தாம் கேட்டுக் கொண்டதையும் மீறி ஜூலியன் அஸாங்கே வெளியிட்டிருப்பதால் கோபம் அடைந்த அமெரிக்க அரசாங்கம், ஜூலியனை கிரிமினல் சட்டத்தின்படியும், உளவு தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் உதவியை ஸ்வீடன் நாடி உள்ளது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக சர்வதேச போலீசார் வாரண்டு பிறப்பித்துள்ளனர். சர்வதேச போலீஸ் உலக நாடுகளை எச்சரித்து உள்ளது.

      ஸ்வீடன் நாட்டில் அவர் மீது கற்பழிப்பு வழக்கு ஒன்றும் பதிவாகி உள்ளது. அவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 2 பெண்களை கடந்த ஆகஸ்டு மாதம் சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி கற்பழித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த கைது வாரண்டை எதிர்த்து அஸாங்கே அப்பீல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர் 2-வது அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் 39 வயதான அசாங்கேயின் தாயார் கிறிஸ்டைன் அஸாங்கே ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பொம்மலாட்டம் நடத்தி வருகிறார். அவர் என் மகனை கைது செய்வதற்காக வேட்டையாட வேண்டாம். அவனை சிறையில் அடைத்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
                          
           இதற்கிடையே விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அஸாங்கேக்கு தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாடு அழைப்பு விடுத்துள்ளது. 'அஸாங்கே தென் அமெரிக்க நாடுகள் பற்றிய ரகசியங்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்கள் நாட்டின் கம்ப்யூட்டர் பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது. அவர் எங்கள் நாட்டில் இருந்தபடி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்,' என்றும் ஈக்வடார் அழைப்பு விடுத்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக