ஞாயிறு, 12 டிசம்பர், 2010

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியத்தை ஏற்படுத்திட தமிழக அரசு முடிவு-முதலமைச்சர் கருணாநிதி

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியத்தை ஏற்படுத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு, சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், கருணாநிதிக்கு, ``நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்'' என்னும் விருது வழங்கப்பட்டது.  அதன்பிறகு விழா நிறைவுப்பேருரை ஆற்றிய கருணாநிதி கூறியதாவது:  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, "அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம்'' எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்'' ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டிலே இருக்கின்ற - இங்கிருந்து சென்ற தமிழர்கள் கூட அல்ல, அங்கே உள்ள தமிழர்கள் - அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடினால், தங்களுடைய நலன்களுக்காகப் போராடினால், அவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - அந்த அரசின் சார்பில் நான் இங்கே சொல்லுகின்றேன் - ``அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நல ஆணையரகம்'' எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், "வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்'' ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்யும்.
உலகப் புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள் மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதைப்போல, தமிழகத்திலும் அமைக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம். நிச்சயமாக மத்திய அரசை இதற்காக வலியுறுத்துவோம் - வெற்றி பெறுவோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக