ஞாயிறு, 5 டிசம்பர், 2010
இளைஞர்களின் ‘சிகரெட்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம்
இளைஞர்களுக்கு சிகரெட் பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சினிமாதான் என்பது சமீபத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சினிமாக்கள் மூலம் சிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. தீவிரமாக நடக்கும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் மீறி, புகைப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகை பிடிக்கும் பழக்கம் ஏன் உண்டாகிறது என்பது குறித்து அரசு சாரா அமைப்புகள், இந்திய தேசிய புகையிலை ஒழிப்பு நிறுவனம் (நோட்), மற்றும் கோவா தன்னார்வ சுகாதார சங்கம் இணைந்து ஆய்வு மற்றும் கருத்துக் கணிப்பு நடத்தின. இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள்:
உலகம் முழுவதும் புகைப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இப்பழக்கத்தில் விழுகின்றனர். இவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் திடீரென எப்படி வந்தது என்று சர்வேயில் கேட்கப்பட்டது. இதில் பலர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 54 சதவீத இளைஞர்களும் 30 சதவீத பொதுமக்களும் ‘சினிமா பார்த்து புகை பிடிக்க ஆரம்பித்தோம்’ என்று கூறியிருக்கின்றனர். சிகரெட், புகையிலை கம்பெனிகளுக்கு சினிமாக்களால் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
உலக அளவில் இந்தியா, சீனாவில் மட்டுமே புகையிலை பழக்கத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம். இப்பழக்கத்தால் உலகம் முழுவதும் சராசரியாக தினமும் ஒரு மணி நேரத்தில் 114 பேர் இறக்கின்றனர். மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய உலக சினிமா, வியாபார நோக்கில் செய்து வரும் தவறுகளால் மக்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. புகை பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரல் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடுபவர்களை பார்த்தால், சினிமாவில் எந்த நடிகரும் சிகரெட் பிடிக்க மாட்டார்.
தொடர் விழிப்புணர்ச்சிகள் மூலம் கோவா, பஞ்சாப் மாநிலங்களில் புகை பிடிப்போர் எண்ணிக்கை குறைந்து தற்போது முறையே 9, 15 என்ற சதவீதமாக உள்ளது. 30 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். புகை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபடவும் புகைப் பழக்கம் இல்லாத சமுதாயம் உருவாகவும் நடிகர்கள், மீடியாக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக