செவ்வாய், 11 ஜனவரி, 2011
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியை இருக்கையில் அமரத் தடை.
கோபால்குஞ்ச்,ஜன.11: பீகார் மாநிலத்தில் கோபால் குஞ்ச் மாவட்டத்தில் சீமா குமாரி என்ற ஆசிரியை ஓர் அரசுப் பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களாக 3 முதல் 12 வயது வரையுள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்து வருகிறார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இவரது வகுப்பறையில் இருக்கை கிடையாது. இவர் தரையில் அமர்ந்துதான் பாடங்களை நடத்துகிறார். "நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவள். அதனால் எனக்கு இருக்கை தர மறுத்து விட்டார்கள். இந்தப் பாரபட்சத்தால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்" என்கிறார் இந்த அபலை ஆசிரியை.
அவர் இந்தப் பாரபட்சத்திற்கு எதிராக நீண்ட நெடிய போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த வருடம் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம், "வகுப்பறைகளில் மற்ற ஆசிரியர்கள் இருக்கைகளில் அமர அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். எனக்கு அந்த அனுமதியில்லை" என்று முறையிட்டார். இதற்கு தண்டனையாக சில நாட்களுக்கு அந்த அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் லால் தாரி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் பணிக்குத் திரும்பிய அந்தத் தலைமையாசிரியர் அதே நிலையைத்தான் மீண்டும் தொடர்கிறார். எந்த வருத்தமும் அவரிடம் தெரியவில்லை. அவரோ வேறு கதையைச் சொல்கிறார். "விதிகளின் படி அந்த ஆசிரியை நியமிக்கப்படவில்லை. போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர் இந்த வேலையை வாங்கியுள்ளார். அதனால் அவருக்கு இருக்கை கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை" என்கிறார் அவர்.
"நாங்கள் இதனை விசாரிப்போம். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது" என்று கோபால்குஞ்ச் மாவட்ட கல்வி அதிகாரி டாக்டர் ராகேஷ் சௌத்ரி கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக