புதன், 5 ஜனவரி, 2011
அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து விலகினார் அழகிரி.
மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக கூறும் கடிதம்.
தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்குமாறும், அது முடியாத பட்சத்தில் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டாராம் அழகிரி.
அழகிரி கோரிக்கைகள்:
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.
- நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியை விட்டு அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
-சென்னையில் கனிமொழி ஏற்பாடு செய்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அழகிரி வைத்துள்ளதாக தெரிகிறது.
- மாநில அளவில் கட்சியில் தனக்கு முக்கியப் பொறுப்பு தர வேண்டும்
மேலும், கோபாலபுரம் இல்லத்தை இலவச மருத்துவமனையாக்கும் திட்டத்திற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அழகிரியின் இந்த புதிய போர்க்கொடியால் திமுக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.
இருப்பினும் அழகிரியின் இந்த போர்க்கொடி முதல்வரைக் கவலைப்படுத்தவில்லை என்று தெரிகிறது. மாறாக, இதை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று நடந்த திமுக உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எதைப் பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் நம்முடன் நீடிப்பது உறுதி. அதேபோல பாமகவும் நம்முடன் வரும். எனவே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று முதல்வர் கூறியுள்ளாராம். இந்தக் கூட்டத்தில் அழகிரி கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்றுஇரவு முதல்வர் கருணாநிதியை அழகிரி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுக வட்டாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக