இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் போலி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெறவும் மத்திய, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) அப்துல் கலீமுக்கு ரங்கா ரெட்டி நீதிமன்றம் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகையை ஈடாக வைத்து அப்துல் கலீமுக்கு ஜாமீன் வழங்கியது.
கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல்கலீம் மருத்துவக்கல்லூரி மாணவராவார். குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களாக அவர் தனது படிப்பை தொடர முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார். குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல் கலீம் போலீசாரால் ஒரு ரகசியமான பண்ணை வீட்டில் வைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார். ஒன்றரை வருடங்கள் கழித்து விடுதலையான அப்துல்கலீம் மீண்டும் செல்ஃபோனை சிறையிலிருந்த ஷேக் அப்துல் காதர் என்பவருக்கு அளித்ததாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளிவந்த அப்துல் கலீம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "நான் பல மாதங்களாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை என்னுடன் சிறையிலிருந்த ஒருவர் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார். உடனே அவர் என்னை சந்தித்து பேசவேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர்தான் அவரைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தார். அஸிமானந்தா வேறு பெரிய நபர்களின் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என நான் கருதுகிறேன். நான் அவரிடம், என்னை போலீசார் கைதுச் செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கியது மற்றும் இரண்டுமுறை நார்கோடிக் அனாலிசிஸ்(உண்மைக் கண்டறியும் சோதனை) சோதனைக்கு உட்படுத்தியது ஆகியவற்றைத் தெரிவித்தேன். மேலும் நான் அவருக்கு தண்ணீர் பிடித்துக் கொடுப்பது உள்பட சில சேவைகளை புரிந்தேன். மேலும் அவர் சொல்வதை அமைதியாக கேட்டேன். இவையெல்லாம் அவருடைய மனதை தொட்டது. இதனால் அவருக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டது." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக