வெள்ளி, 11 மார்ச், 2011

மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லை; தமிழக அரசு அறிவிப்பு


மக்கள் நல்வாழ்த்துறை மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 
இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என இந்திய மருத்துவக் கழகம் எடுத்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 18.2.2011 அன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் இந்திய மருத்துவக் கழகத்திற்கு இந்திய மருத்துவக் கழகத்தின் பொது நுழைவுத் தேர்வு சம்பந்தமான அறிவிக்கைக்கு எந்த ஒப்புதலும் மத்திய அரசு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 
ஆனால், இந்திய மருத்துவக் கழகத்தின் வழக்கறிஞர் மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கி உள்ளது எனக் கூறியுள்ளார். மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய மருத்துவக் கழகமும் மத்திய அரசும் முரண்பாடான கருத்தை கொண்டிருப்பதால் இரு தரப்பினரும் அமர்ந்து கலந்தாலோசித்து இது குறித்து ஒருமித்த முடிவெடுப்பது நல்லது என்று தெரிவித்தது. 

இந்த வழக்கு மீண்டும் 7.3.2011 அன்று விசாரணைக்கு வந்த போது, இந்திய மருத்துவக் கழகத்தின் வழக்கறிஞர் மருத்துவப் படிப்பிற்கான மாற்றியமைக்கப்பட்ட சட்ட நெறிமுறைகள் 21.12.2010 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது என்றும், மாற்றியமைக்கப்பட்ட நெறி முறைகளின் படி மத்திய அரசின் முன் அனுமதியுடன் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். 

தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கென இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட அதன் மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகளை அமல் படுத்துவதற்குத் தடையாணை பெற்றுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்றம், இந்திய மருத்துவக் கழகத்தின் மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகள் சட்டப்படி செல்லத்தக்கதா? என்ற கேள்வி எழவில்லை என்று கூறியுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட நெறி முறைகளால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமாயின் அவர்கள் அதனை எதிர்த்து வழக்குத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்த மட்டில், நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டு 2007-08 ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் பிளஸ்-2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மருத்துவ படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கும் தற்போதுள்ள நடைமுறை தொடரப்பட வேண்டும் என முதல்-அமைச்சர், பிரதமருக்கும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரிக்கும் 15.8.2010ல் கடிதம் எழுதி உள்ளார். 

மேலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது. தமிழ்நாடு அரசு எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மேல்நிலைக்கல்வி தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்சநீதி மன்றத்தில் தெரிவித்தது. 

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கை குறித்து இடைக்கால தடை உத்தரவும் கடந்த ஜனவரி 6-ம் தேதி அன்று தமிழக அரசால் பெறப்பட்டுள்ளது. 11.1.2011 முதல் 13.01.2011 வரை ஐதராபாத்தில் மத்திய மக்கள் நல்வாழ்த் துறை அமைச்சர் தலைமையில் நடந்த மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் மருத்துவ படிப்பிற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட மாட்டாது என முடிவெடுக்கப்பட்டது. 

அகில இந்திய அளவில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து ஏற்கனவே இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட அறிவிக்கையினை திரும்பப் பெற வேண்டும் என்று 3.1.2011 அன்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசின் கொள்கையின்படி, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஏதும் இன்றி தற்போது உள்ள நிலையிலேயே இவ்வாண்டும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக