வெள்ளி, 20 மே, 2011
சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல். அடுத்த மாதம் தொடங்கும்
இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து இருக்கிறது. இந்தியா முழுவதும் சாதிவாரியான கணக்கெடுப்பு கடந்த 1931&ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டது. பின்னர் கடந்த 2002&ம் ஆண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சமீபத்தில் அரசியல் கட்சிகள் எழுப்பின. இந்த பிரச்சினை பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. அப்போது இது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இது பற்றி ஆலோசிக்க மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று காலை, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி அம்பிகா சோனி உள்பட மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுபற்றி கூட்டம் முடிந்தபின், மந்திரி அம்பிகா சோனி நிருபர்களிடம் கூறியதாவது:& சாதிவாரியான கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் (ஜூன்) தொடங்கும். டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
கிராம பகுதிகளிலும், நகர பகுதிகளிலும் கணக்கெடுப்பு எடுக்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பற்றி சாதி, மதம் வாரியாக கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பு, மத்திய அரசின் 12&வது ஐந்தாண்டு திட்டங்களை வகுக்க பயன் உள்ளதாக இருக்கும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மத்திய அரசின் திட்டங்களுக்கு மானியம் அளிப்பதை இறுதி செய்யவும் இது உதவியாக இருக்கும்.
கிராம வளர்ச்சி துறை, வறுமை ஒழிப்பு துறை, இந்திய ரிஜிஸ்தர் ஜெனரல் அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளும். பாரத் எலெக்டிரானிக்ஸ் தயாரித்துள்ள கையடக்க சிறிய மின்னணு எந்திரத்தை, இந்த கணக்கெடுப்புக்கு ஊழியர்கள் பயன்படுத்துவார்கள். இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.
தினத்தந்தி

0 comments:
கருத்துரையிடுக