வியாழன், 20 ஆகஸ்ட், 2009
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து மத்திய அரசு யோசனைக்கு 99 சதவீத மக்கள் ஆதரவு அமைச்சர் கபில் சிபல் பேச்சு
பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு திட்டத்துக்கு 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறினார்.
பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையில்லை என்று மத்திய அரசு யோசனை தெரிவித்தது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி அரியானா மாநிலம் பஞ்குலாவில் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் கபில்சிபல் கலந்து கொண்டார்.
பின்னர் நிருபர்களுக்கு கபில்சிபல் அளித்த பேட்டி: கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக தேர்வுகள் நடத்துவதில் சீர்திருத்தங்கள் தேவை. கல்வி என்பது மதிப்பெண் எடுப்பதற்கான ஒன்று அல்ல. உலகில் வாழ தேவையான தகுதிகளை ஒருவருக்கு ஏற்படுத்துவது கல்விதான்.
நாளைய சவால்களை சந்திக்கும் அளவுக்கு நம் குழந்தைகளை திறமைசாலிகளாக கல்வி மாற்ற வேண்டும். அவர்கள் விருப்பப்படி படிக்க வழி செய்ய வேண்டும்.\
பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையில்லை என்று மத்திய அரசு கருதுகிறது. இந்த யோசனைக்கு 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டில் உள்ள 41 மாநில கல்வி வாரியங்களிடமும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து மத்திய அரசு விவாதிக்கும்.
ஆசிரியர்கள் தகுதி:அதே போல், தேசிய பாடத்திட்ட வரையறைக்கு தேவையான தகுதியை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த தகுதி இல்லாதவர்கள், அடுத்த 5 ஆண்டுக்குள் தகுதியை பெற வேண்டும். இல்லை என்றால், அவர்கள் ஆசிரியர் தொழிலை கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு போக வேண்டியதுதான்.
பயிற்சி பள்ளிகள்: ஆசிரியர்கள் பயிற்சி பள்ளிகளின் நிலை கவலை அளிக்கிறது. இந்த பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் தரம் குறித்து மத்திய அரசு மறுஆய்வு செய்யும். இவ்வாறு அமைச்சர் கபில்சிபல் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக