
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
காந்தகார் விமான கடத்தல் விவகாரம் அத்வானி பொய் சொல்கிறார் --பிரிஜேஷ் மிஸ்ரா பேட்டி

காந்தகார் விமான கடத்தலின் போது பயணிகளை விடுவிக்க 3 தீவிரவாதிகளை விடுதலை செய்து ஜஸ்வந்த் சிங் கூட்டிச் சென்றது அத்வானிக்கு நன்றாக தெரியும் என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா கூறினார்.
காந்தகார் விமானக் கடத்தலின் போது பயணிகளை விடுவிக்க 3 தீவிரவாதிகளை விமானத்தில் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தன்னுடன் அழைத்துச் சென்றது தனக்கு எதுவும் தெரியாது என்று அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, எனது நாடு, என் வாழ்க்கைÕ என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா மறுத்துள்ளார். தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமிர்தசரசிலிருந்து காந்தகாருக்கு விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்றது தனக்கு உடனே தெரியாது என்று அத்வானி கூறுவது பொய். அதேபோல், பயணிகளை விடுவிக்க 3 தீவிரவாதிகளுடன் காந்தகாருக்கு ஜஸ்வந்த் சிங் சென்றது அத்வானி க்கு நன்கு தெரியும். ஏனெனில், தீவிரவாதிகளை ஜஸ்வந்த் சிங் அழைத்துச் சென்று பயணிகளை பத்திரமாக மீட்பது என்பது பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில்தான் முடிவு செய்யப்பட்டது. அந்த கமிட்டியில் இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா ஆகியோர், அத்வானிக்கு ஜஸ்வந்த் சிங் காந்தகாருக்கு செல்வது தெரியும் என்று கூறியுள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எடுக்கப்பட்ட மிக கஷ்டமான முடிவு இது. தீவிரவாதிகள் முதலில் 36 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், 20 கோடி டாலர்கள் தர வேண்டும் என்றும் கேட்டனர். பின்னர், பேச்சு நடத்தி 160 பயணிகளை காப்பாற்ற 3 தீவிரவாதிகளை மட்டும் விடுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கு அத்வானியின் சம்மதமும் பெறப்பட்டது. அது மட்டுமின்றி, அப்போது எல்லா கட்சிகளும் அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சந்தித்து, பயணிகளை உயிருடன் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்குமாறும் கேட்டுக் கொண்டது.
இவ்வாறு மிஸ்ரா கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக