சனி, 29 ஆகஸ்ட், 2009

அழிவுப் பாதையில் பாஜக
ஆர்எஸ்எஸ் தலைவருடன் அத்வானி சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சியின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிட மாட்டோம் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் வெள்ளிகிழமை அறிவித்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல், பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்துப் பேசினார்.

சனிக்கிழமை காலை, பாஜகவின் இன்னொரு மூத்த தலைவரும், அத்வானிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று கூறப்படுபவருமான முரளி மனோகர் ஜோஷியுடன் மோகன் பகவத் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அத்வானி ஏற்கக்கூடாது என்று முரளி மனோகர் ஜோஷி வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இன்று பிற்பகலில், டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் மோகன் பகவத்தைச் சந்தித்த அத்வானி, சுமார் 90 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

பாஜக தலைமையிலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்வானியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எதிர்க் கட்சித் தலைவர் பதவியில் அத்வானி தொடர்வதற்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், அவரே பதவி விலகுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக ஊகங்கள் வெளியாகின்றன.

அத்வானிக்குப் பதிலாக, தற்போதைய மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்படலாம் என்றும், பாஜக தலைவராக அருண்ஜேட்லிக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இன்று, மோகன் பகவத்துடன் அத்வானி நடத்திய ஆலோசனையில், தலைமை மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார்.


0 comments:

கருத்துரையிடுக