சனி, 8 ஆகஸ்ட், 2009

குமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது



கன்னியாகுமரி, ஆக. 6: கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுவது வழக்கம்.

இதேபோல, இந்த ஆண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில தினங்களாக குறைந்து காணப்படுகிறது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அதிகமாக நடமாடும் முக்கடல் சங்கமம், சன்னதி தெரு, காந்தி மண்டப சாலை, மணல்தேரி, சூரிய அஸ்தமன காட்சிக் கோபுரம், தமிழன்னை பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின.

கூட்டம் குறைவாக இருப்பதால் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகுகளில் குறைந்த அளவிலான பயணிகளே ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

தங்கும் விடுதிகளில் அறைகள் காலியாகவே இருப்பதால் வாடகைக் கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. உணவகங்களும் வியாபாரம் இன்றி வெறிச்சோடி உள்ளன.

பள்ளி காலாண்டு விடுமுறை, ஓணம் பண்டிகை நாள்களில்தான் இனி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் பல்வேறு உள்ளூர் வியாபாரிகள் தற்போது தங்கள் கடைகளை மாலை வேளைகளில் மட்டுமே திறந்து வைத்துள்ளனர்.


0 comments:

கருத்துரையிடுக