புதன், 26 ஆகஸ்ட், 2009
அழிவுப் பாதையில் பாஜக:
மோடி ஏன் விலகவில்லை?- அருண் ஷோரி
குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான மிகப் பெரிய கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடி ஏன் பதவி விலகவில்லை என்பது குறித்த உண்மை விவரங்களை புட்டு வைத்துள்ளார் அருண் ஷோரி.
2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்குப் பின்னர் மோடி ஏன் பதவி விலகவில்லை என்பது குறித்து என்டிடிவிக்கு அருண் ஷோரி பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது..
குஜராத் கலவரம் உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது. பிரதமர் வாஜ்பாய் மிகவும் கவலையோடு இருந்த காலகட்டம். அப்போது கோவாவில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோருடன் நானும் பயணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அதை ஏற்க நான் மறுத்தேன். ஆனால், வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என்னை அணுகி, நீங்கள் செல்லாவிட்டால், வாஜ்பாயும், அத்வானியும் விமான பயணம் முழுவதும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே பயணிக்கு நிலை ஏற்படும் என்றனர்.
இதையடுத்து நான் உடன் செல்ல ஒப்புக் கொண்டேன். விமானத்தில் வாஜ்பாய், அத்வானி, நான் தவிர அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் உடன் இருந்தார்.
நானும், ஜஸ்வந்த் சிங்கும் எதிரெதிர் சீட்களில் இருந்தோம். அதேபோல வாஜ்பாயும், அத்வானியும் எதிரெதிர் சீட்களில் அமர்ந்திருந்தனர். வாஜ்பாயும், அத்வானியும் கடைசி வரை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை.
பயணத்தின்போது வாஜ்பாய் ஒரு நாளிதழை எடுத்து படிக்க ஆரம்பித்தார். அதேபோல அத்வானியும் ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து நான் வாஜ்பாய் கையில் இருந்த பேப்பரை வாங்கி கீழே வைத்துவிட்டு, மோடி குறித்து நாம் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வாஜ்பாயிடமும், அத்வானியிடமும் கூறினேன்.
கோவாவில் விமானம் தரையிறங்கியதும், மோடியை விலகச் சொல்லும் முடிவுக்கு வாஜ்பாயும், அத்வானியும் வந்திருந்தனர்.
(இந்த சம்பவம் குறித்து ஜஸ்வந்த் சிங்கும் கடந்த வாரம் பேட்டி தந்தது குறிப்பிடத்தக்கது. அதில், தன்னிடம் வாஜ்பாய், மோடியை விலகச் சொல்லுமாறு அத்வானியிடம் கூறுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அத்வானி, மோடியை விலகச் சொன்னால் கட்சிக்குள்ளும், குஜராத்திலும் பெரும் குழப்பம் ஏற்படும் என்றும் ஜஸ்வந்த் சிங் கூறியிருந்தார்)
பாஞ்சிம் நகரில் தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. அங்கு மோடி பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலரும் அதை நிராகரித்தும், எதிர்த்தும் குரல் எழுப்பினர். அவர்களில் முக்கியமானவர்கள் கேசுபாய் படேல், பிரமோத் மகாஜன் ஆகியோர். (இதில் மோடிக்கும் படேலுக்கும் எப்போதும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.)
அந்த எதிர்ப்பு இயல்பானதா அல்லது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இருந்தும் கூட மோடியை விலகச் சொல்வது என்ற முடிவில் பிரதமர் உறுதியாக இருந்தார். ஆனால் அந்தக் கூட்டத்தோடு அந்த விஷயம் அத்தோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது.
மோடி விவகாரம் தொடர்பாக வாஜ்பாய் பெரும் வேதனையில் இருந்தார். இந் நிலையில் சிங்கப்பூர், கம்போடியா பயணத்தை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
விமானத்தில் குஜராத் கலவரத்தை நினைத்து அவர் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து பிரதமரின் அப்போதைய செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ராவும், பிரதமரின் மருமகன் ரஞ்சன் பட்டசார்ஜியும் என்னை அணுகி, பிரதமரிடம் பேசி அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டனர்.
நான் வாஜ்பாயை விமானத்தில் அவரது கேபினில் சந்திக்கச் சென்றேன். அங்கு அவர் மட்டும் தனியாக இருந்தார். தலையை தனது கைகளில் கவிழ்த்திருந்தார். என்னைப் பார்த்ததும், இப்படிப்பட்ட சூழ்நிலையில், எப்படி என்னால் சிங்கப்பூர், கம்போடியா பயணத்தை மேற்கொள்வது என்றார் வாஜ்பாய்.
நான் அவரை அமைதிப்படுத்தி, அத்வானியைத் தொடர்பு கொண்டு மோடியை உடனே விலகக் கூறுமாறு சொல்லுங்கள் என்றேன். ஆனால் வாஜ்பாய் போன் செய்யவில்லை. அதன் பிறகும் கூட வாஜ்பாய் இதுகுறித்து அத்வானியிடம் எதுவும் பேசவில்லை என்று அறிந்து கொண்டேன்.
இதனால் தொடர்ந்து மோடி முதல்வர் பதவியில் நீடித்தார்என்று கூறியுள்ளார் ஷோரி.
ஷோரியிடம் விளக்கம் கேட்கும் பாஜக:
இந் நிலையில் கட்சியின் தலைமைக்கு எதிராகப் பேசியது தொடர்பாக மூத்த தலைவர் அருண் ஷோரியிடம் பாஜக விளக்கம் கேட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பாட்டை ஆர்எஸ்எஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் பேசியது குறித்து கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடந்தது.
இதில் ஷோரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரிடம் விளக்கம் கூட கோரப்படவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்ட விதம் குறித்து சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து, அருண் ஷோரி விஷயத்தில் பாஜக நோட்டீஸ் அனுப்பி முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதாகத் தெரிகிறது.
நன்றி: oneindia.in
0 comments:
கருத்துரையிடுக