செவ்வாய், 22 செப்டம்பர், 2009

பூடானில் பூமி அதிர்ச்சி; இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி



பூடான் நாட்டில், இந்தியாவின் அசாம் மாநில எல்லையை ஒட்டிய மூங்கார் பகுதியில் நேற்று பகல் 3 மணி அளவில் பயங்கர பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. பூமிக்கடியில் 7.2 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி, ரிக்டர் ஸ்கேல் அளவில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.
இந்த பூமி அதிர்ச்சி காரணமாக தலைநகர் திம்புவில் பல கட்டிடங்கள் குலுங்கின. கதவுகள், ஜன்னல்கள் படபடவென அடித்தன. இதனால் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் அலறியடித்து ஓடினார்கள். 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், மடாலயங்கள், வணிக வளாகங்கள் இடிந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. 
இடிபாடுகளில் சிக்கி திம்புவில் 4 பேர் உள்பட 11 பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.
இறந்தவர்களில் 3 பேர் இந்தியர்கள். அவர்கள் சாம்டிரக்ஜோங்கர் என்ற இடத்தில் சாலை அகலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர் என்று ஒரு தகவல் கூறுகிறது. கட்டிடம் கட்டுமானப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு இருந்தனர் என்று இன்னொரு தகவல் கூறுகிறது. பூமி அதிர்ச்சியில், அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த பூமி அதிர்ச்சி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் தாக்கியது.

0 comments:

கருத்துரையிடுக