புதன், 2 செப்டம்பர், 2009

இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக பாகிஸ்தான் அணு ஆயுத குவிப்பு அமெரிக்கா திடுக்கிடும் தகவல்

பாகிஸ்தானிடம் 90 அணுகுண்டுகள் இருப்பதாகவும், அணு குண்டுகளை சுமந்து சென்று தாக்கும் சக்தி வாய்ந்த இரண்டு புதிய ஏவுகணைகளை தயாரித்து வருவதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

90 அணுகுண்டுகள்

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய `ஹார்பூன்' ஏவுகணைகளை, விதிகளை மீறி தன்னுடைய விருப்பப்படி புதிதாக மாற்றி வடிவமைத்தது. அந்த ஏவுகணைகளை இந்தியாவை நோக்கி வைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கப்பல்களில் பயன்படுத்தும் போர் விமானங்களையும் நிலத்திலும் தாக்கும் விதமாக மாற்றி இருக்கிறது.

அமெரிக்க ராணுவ தளவாட ஏற்றுமதி சட்டத்துக்கு முரணானது என்பதால் பாகிஸ்தானிடம் அமெரிக்கா விளக்கம் கேட்டும்ளது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானிடம் 90 அணு குண்டுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே இருந்ததை விட 30 குண்டுகளை அதிகமாக தயாரித்து இருக்கிறது.

எந்த வகையை சேர்ந்தவை?

இந்த தகவலை, அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. கூட்டமைப்பு சார்பாக வெளியாகும் அணுசக்தி குறிப்புகம் என்ற இதழில் ஹன்ஸ் கிரிஸ்டென்சென் என்ற விஞ்ஞானி, இது பற்றி எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானிடம் 70 முதல் 90 அணுகுண்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு 60 குண்டுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எத்தனை குண்டுகளை ராணுவத்தில் தயாராக வைத்திருக்கிறது? அவை எந்த வகையை சேர்ந்தவை? என்ற விவரங்களை மதிப்பிட முடியவில்லை. எனினும், பாகிஸ்தானிடம் இருக்கும் அணு குண்டுகளின் எண்ணிக்கை, 100 ஐ தாண்டவில்லை.

இரண்டு புதிய ஏவுகணைகள்

அணு குண்டுகளை சுமந்து செல்லும் `ஷாஹீன்-2' என்ற ஏவுகணையை நீண்ட கால தயாரிப்புக்கு பிறகு விரைவில் ராணுவத்தில் சேர்க்க உள்ளது. அமெரிக்க விமானப்படையின் விண்வெளி உளவுப் பிரிவு மூலமாக கடந்த ஜுன் மாதத்தில் இந்த தகவல் கிடைத்தது. 2008-ம் ஆண்டு ஏப்ரலில் மட்டும் மூன்று நாட்களுக்கும் இரண்டு ஏவுகணை சோதனைகளை பாகிஸ்தான் நடத்தியது.

தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் `பார்பர்' மற்றும் வானத்தில் உள்ள இலக்கை தாக்கும் `ராவுத்' ஆகிய அணு குண்டுகளை சுமந்து செல்லும் இரண்டு வகையான ஏவுகணைகளையும் தயாரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த பணியில் பாகிஸ்தான் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எனவே, சிறிய மற்றும் இலகு ரகத்தை சேர்ந்த புளுட்டோனியம் அணுகுண்டுகளை வெற்றிகரமாக அந்த நாடு தயாரித்து விட்டது என்பது நிரூபணமாகிறது.

செயற்கை கோள் படங்கள்

2008-ம் ஆண்டு தொடக்கத்தில் 2 ஆயிரம் கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும், 90 கிலோ புளுட்டோனியத்தையும் பாகிஸ்தான் வைத்திருந்தது. தற்போது, புளுட்டோனியம் உற்பத்தி செய்யும் இரண்டு புதிய அணு உலைகளை பாகிஸ்தான் அமைத்து வருகிறது. புளுட்டோனியத்தை மறு சுழற்சி செய்யும் தகுதியையும் விரிவாக்கி வருகிறது.

இதற்காக, ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் அணுசக்தி தொழில்நுட்ப நிறுவனத்தின் அருகிலேயே இரண்டாவது தனி அணு உலை அமைப்பதை செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன. இது தவிர, சாஸ்மா பகுதியில் இருக்கும் 300 மெகாவாட் அணுமின் உற்பத்தி நிலையத்திலும், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஜி கான் பகுதியிலும் யுரேனிய உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன.

தீவிரவாதிகளின் பகுதிகள்

இந்த செயல்பாடுகள் அனைத்தையும் பார்க்கும்போது தன்னுடைய அணு ஆயுத பலத்தை பாகிஸ்தான் அதிகரிக்க தொடங்கி விட்டது என்பதையே உணர்த்துகிறது. இந்தியாவுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தக்கூடிய அபாயமும் உள்ளது.

அதே நேரத்தில், தீவிரவாதிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் தான் பாகிஸ்தானின் பெரும்பாலான அணு உலைகள் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ராணுவத்தின் தீவிரவாத ஒழிப்பு மையம் வெளியிட்ட பத்திரிகையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக