செவ்வாய், 29 செப்டம்பர், 2009

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் கட்டக்கூடாது - உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் பொது இடங்களில் புதிய வழிபாட்டுத் தலங்களை கட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் அனைத்து பிரிவினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தாகம் சர்மா ஆகியோரைக் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களை பொது இடங்களில் கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தங்களின் இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள வழிபாட்டுத் தலங்களை அவற்றின் முக்கியத்துவத்தைப் பொருத்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொது இடங்களில் புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டுவதில்லை என்பதில் மத்திய - மாநில அரசுகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதிகள் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து புதிய வழிபாட்டுத் தலங்களை கட்டுவதற்கு அனுமதிப்பதில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு அரசுக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் உட்பட அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் இடிக்குமாறு குஜராத் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக