திங்கள், 28 செப்டம்பர், 2009
குமரி மாவட்டத்தில் 28 குழந்தைகளுக்கு காசநோய் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் 1 முதல் 9 வயதுவரையுள்ள 1839 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 28 குழந்தைகளுக்கு புதிதாக காசநோயின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காச நோயின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆண்டுதோறும் காசநோயின் பாதிப்பு குறித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி துவங்கி ஒரு மாத காலம் காசநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 24 கிராமங்களில் வீடு வீடாக சென்று 1 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு காசநோய் பரவியிருக்கிறதா? என்று மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது குழந்தைகளுக்கு 'மேன்டக்ஸ்’ என்ற தோல் ஊசி போடப்பட்டது. ஒவ் வொரு கிராமத்திலும் 85 குடும்பங்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தோல் ஊசி போடப்பட்டது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜாண் தலைமையில் வந்த மருத்துவ குழுவினரால் கிராமங்கள் தோறும் அதிகாலை வேளையில் இந்த சோதனையை நடத்தினர்.
தோல் ஊசி போடப்பட்ட 72 மணி நேரத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட குழந்தைகளிடம் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. முகாம் முடிவடைந்த நிலையில் குமரி மாவட்டத்தில் 28 குழந்தைகளுக்கு புதிதாக காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முகாம் ஒருங்கிணைப்பாளர் மணிராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்த காசநோய் பரிசோதனை திட்ட முகாம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் 24 கிராமங்களை சேர்ந்த 2053 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு 1839 குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 28 குழந்தைகளுக்கு காசநோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இனி அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்படும். இந்த பாதிப்பு கிராமங்களில் பரவலாக இருந்தது. ஒரே கிராமத்தில் ஒட்டுமொத்தமாக பாதிப்பு கண்டறியப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Labels:
குமரி மாவட்டம்
0 comments:
கருத்துரையிடுக