வியாழன், 1 அக்டோபர், 2009
அமெரிக்க தீவில் சுனாமி: 100 பேர் பலி
பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவுக்கூட்டங்களில் நேற்றிரவு பயங்கர நில நடுக்கமும் அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் பிஜி தீவை ஒட்டி சமோவா தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதில் சில பகுதிகள் அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள சமோவா தீவுப் பகுதியில் சுமார் 65 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த தீவுப்பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 8.3 ஆக பதிவான நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் சமோவா தீவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலில் சுனாமிப் பேரலைகள் தோன்றின. சுமார் 20 மீட்டர் உயரத்துக்கு அடுத்தடுத்து 4 அலைகள் எழுந்தன. சமோவா தீவுக்கூட்டங்களை சுனாமி பயங்கரமாக தாக்கியது. இதில் ஏராளமான கடலோர கிராமங்கள் அடியோடு அழிந்தன. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. படகுகள் தூக்கி வீசப்பட்டன. நீரில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 1 கி.மீ. தூரத்துக்கு கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. நீரில் வீடுகள் மூழ்கியுள்ளதால், மக்கள் உயரமான பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிலநடுக்கம் மற்றும் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி சமோவா தீவில் 20 பேரும் அமெரிக்க சமோவா பகுதியில் 19 பேரும் இறந்ததாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. சேதம் பயங்கரமாக இருப்பதால் 100-க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நீர் வடிந்த பின்னரே பலி எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.
தொடர்ந்து நில அதிர்வும் அதன் காரணமாக சுனாமியும் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். அமெரிக்க சமோவா பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தேடுதல், மீட்பு, நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன
0 comments:
கருத்துரையிடுக