வியாழன், 1 அக்டோபர், 2009

குமரியில் திடீர் கனமழை; ரோடுகளில் வெள்ளம்


குமரியில் நேற்று திடீர் கனமழை கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருமணி நேரத்தில் கனமழை பெய்வதற்குள் மக்கள் கடும் அவதி அடைந்ததை காணமுடிந்தது.
கடந்த 3 மாதங்களாக குமரி மாவட்டத்தில் மழை பெய்யாமல் பொய்த்து வரும் நிலை உள்ளது. அறுவடை மும்மூரமாக நடந்து வரும் வேளையில் இன்னும் 15 நாட்களுக்கும் அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் அடுத்த கும்பப்பூ சாகுபடிக்கு போதிய தண்ணீர் தேவைப்படும் நிலையில் தொடர்ந்து மழை ஏமாற்றி வரும் நிலை இருந்தது. பேச்சிப்பாறையில் 21.25 அடி தண்ணீரும், பெருஞ்சாணியில் 45.50 அடி தண்ணீரும் உள்ளன. சிற்றார் ஒன்றில் 4.79 அடியும், சிற்றார் 2ல் 4.89 அடி தண்ணீரும் இருந்தன. மேலும் பேச்சிப்பாறையில் விநாடிக்கு 280 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணியில் 154 கனஅடி தண்ணீரும் உள்வரத்தாக வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் இருந்தே குமரி மாவட்டத்தில் மழை பெய்யத்துவங்கியது. விட்டு விட்டு பெய்த மழை காலை 11 மணிக்கு வெளுத்து வாங்கியது. இதனால் நாகர்கோவில், மற்றும் குமரி மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரண்டு மணிநேரம் பெய்த மழையை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்ததை காணமுடிந்தது. பலநாள் வெயிலை தாங்கிய மக்களின் வேலைகளுக்கு மழை இடையூறு கொடுப்பது போன்று உணர்ந்தனர். ஆனாலும் தொடர்ந்து கனமழை குமரியில் நீடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
நேற்று காலை நேரத்தில் கனமழை பெய்தாலும் மாலை வேளையில் மழை பெய்த சுவடே தெரியாத நிலையில் ரோடுகள் காணப்பட்டன. தொடர்ந்து பலநாட்களாக காணப்பட்ட வெயிலின் தாக்கத்தால் இந்நிலை ஏற்பட்டது. நேற்று கனமழை பெய்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் வெளியேறும் நீர்ட்டத்தின் அளவு 200 கனஅடியாக குறைக்கப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக