திங்கள், 5 அக்டோபர், 2009
மும்பை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 13 பெண்கள் பிடிபட்டனர்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைத் தடுக்க மும்பை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 13 பெண்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது சோதனையில் தெரியவந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன. 2007 ஜூன் முதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 37,988 பேர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. விபத்துகளைக் குறைப்பதற்காக வாகனங்களில் செல்வோர் குடித்துவிட்டு செல்கிறார்களா என்பதை போக்குவரத்துப் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
போலீசாரின் சோதனையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 37,988 பேர் பிடிபட்டனர். அவர்களில் 13 பேர் பெண்கள் என போக்குவரத்துப் போலீசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ஆணா, பெண்ணா என்றெல்லாம் பார்க்காமல் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என போக்குவரத்து துணை கமிஷனர் சாலுங்கே தெரிவித்தார்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பிடிபட்ட 13 பெண்களில் இரண்டு பேருக்கு ஒருநாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் நால்வருக்கு அலுவல் நேரம் முடியும்வரை ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கு லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இருவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன என போக்குவரத்துப் போலீசார் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக