சனி, 17 அக்டோபர், 2009

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கைரேகையும் பதிவு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் அடையாள எண் வழங்கும் திட்டம்

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, அனைவரிடமும் 10 விரல் ரேகைகளையும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. அப்போது, புதிய ஏற்பாடாக, ஒவ்வொருவரின் 10 விரல் ரேகைகளையும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இத்தகவலை இந்திய தேசிய அடையாள ஆணையத்தின் தலைவர் நந்தன் நிலேகானி தெரிவித்துள்ளார். இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் பணியில் இருந்து விலகி, மேற்கண்ட மத்திய அரசுப் பணியில் இணைந்துள்ளார். அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை, அடையாள எண் ஆகியவை வாங்குவதே இந்த ஆணையத்தின் பணி ஆகும்.
இதுகுறித்து நந்தன் நிலேகானி கூறியதாவது:-
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, ஒவ்வொரு குடிமகனின் 10 விரல் ரேகைகளும் பதிவு செய்யப்படும். அல்லது அதற்குப் பதிலாக, கண்ணின் கருவிழியை படமாக எடுக்கும் யோசனையும் பரிசீலனையில் உள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள எண் கொடுக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இது 16 இலக்கங்கள் கொண்ட எண்ணாக இருக்கும். இந்த திட்டத்துக்காகவே, அனைவரது விரல் ரேகைகளும் பதிவு செய்யப்படுகின்றன. அடையாள எண் வழங்கும் திட்டம், இன்னும் 18 முதல் 24 மாதங்களில் தொடங்கி விடும். அதையடுத்த 4 ஆண்டுகளில் 60 கோடி பேருக்கு அடையாள எண் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
முதலில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் பயனாளிகளுக்கு அடையாள எண் வழங்கப்படும்.அடையாள எண் வழங்கும் திட்டம், ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் நன்மைக்காக தீட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஏழைகளைச் சென்றடையும் நோக்கத்திலும், இத்திட்டங்களில் போலி நபர்கள் பயன் பெறுவதைத் தடுக்கும் நோக்கத்திலும் தீட்டப்பட்டுள்ளது.அதே சமயத்தில், இந்த அடையாள எண்ணை குடியுரிமை உள்பட எவ்வித உரிமைகளையும் பெற பயன்படுத்த முடியாது.
அமெரிக்காவில் 12 கோடி பேருக்கு மட்டுமே அடையாள எண் வழங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் 120 கோடி பேருக்கு அடையாள எண் வழங்க வேண்டும். எனவே, இது சவாலான பணியாக இருக்கும். இதற்கு ரூ.11/2 லட்சம் கோடி செலவாகும் என்று கூறப்படுவது தவறு. ஆனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகும். இந்த நிதியை யார் அளிப்பது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு நந்தன் நிலேகானி கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக