புதன், 14 அக்டோபர், 2009
வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த காலாவதியான உணவு பொருட்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்
சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை, சுங்கத்துறை அதிகாரிகள் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து 17 கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று வந்தது. அந்த கன்டெய்னர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவற்றில் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் சாக்லெட், பபுல்கம், ஜெல்லி மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆவணங்களை பார்த்தபோது, இதுபற்றிய தகவல்கள் முறையாக இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து கன்டெய்னர்களை திறந்து சோதனை நடத்தினர்.அவற்றில் இருந்த தின்பண்டங்கள், காலாவதியாகி இருந்தது தெரிந்தது. அவற்றை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் பெங்களூரில் உள்ள மத்திய உணவு பரிசோதனை கூடத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இரண்டு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில், அப்பொருட்கள் உண்ண தகுதியற்றவை என்றும், அவற்றை சாப்பிடும் சிறுவர்களுக்கு பல்வேறு நோய்கிருமிகள் தாக்கும், வயிற்றுவலி மற்றும் குணப்படுத்த முடியாத நோய்கள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கன்டெய்னர்கள் பெங்களூரில் உள்ள வியாபாரியின் முகவரிக்கு வந்துள்ளது. சீனாவிலிருந்து 8, மலேசியாவில் இருந்து 5, வியட்னாமில் இருந்து 2, தாய்லாந்தில் இருந்து 2 என மொத்தம் 17 கன்டெய்னர்கள் கப்பலில் வந்திருந்தன. இப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1.50 கோடியாகும். இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்
Labels:
வெளிநாடு;உணவு
0 comments:
கருத்துரையிடுக