புதன், 7 அக்டோபர், 2009

கோவை குண்டுவெடிப்பு; இரு மைனர்களை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவு

கோவை குண்டு வெடிப்பு நடந்த உடன் அதிரடி ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை, அல் உம்மா பாஷா உள்ளிட்ட பலரை கைது செய்தது. அந்த வழக்கில் பாஷா அலுவலகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முஸ்லிம்கள் கூட கைது செய்யப்பட்டார்கள் என்று சில நடுநிலையாளர்கள் அப்போது வேடிக்கையாக விமர்சித்ததுண்டு. ஆனால் அதை உண்மைப்படுத்தும் வகையில்,கோவை தொடர் வெடிகுண்டு சம்பவத்தின்போது மைனராக இருந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது விதிமுறைக்கு மாறானது என்று கூறி 2 பேரை விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முஜிபுர் ரகுமான், முகமது அம்ஜத்அலி ஆகியோரை விடுதலை செய்யும்படி நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள். 
தீர்ப்பில் கூறியிருப்பதாவது:இருவரும் தொடர் வெடிகுண்டு சம்பவம் நடந்தபோது மைனர்களாக இருந்தார்கள். முஜிபுர் ரகுமானுக்கு அப்போது 17 ஆண்டும் ஒரு மாதமும் தான் வயது ஆகியிருந்தது. இதுபோல அம்ஜத் அலிக்கு 16 ஆண்டும் 10 மாதமும் வயதாகி இருந்தது. ஏற்கனவே உள்ள விதிமுறைபடியிலும், சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு அடிப்படையிலும், இளஞ்சிறார் பாதுகாப்பு சட்டப்படி பாதுகாப்பு பெற இவர்களுக்கு உரிமை உள்ளது. இவர்களுக்கு எதிராக தடா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க தகுதி கிடையாது. இளஞ்சிறார் வாரியம் இவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இவர்கள் அதிகபட்ச நாட்கள் சிறையில் இருந்துவிட்டனர்.இந்த சூழ்நிலையில் இவர்கள் மீதான வழக்கை மீண்டும் இளஞ்சிறார் வாரியத்துக்கு அனுப்பினால் எந்த விதமான நோக்கமும் நிறைவேறப்போவதில்லை. ஆகவே, இவர்கள் மீது வேறு எந்த வழக்கும் இல்லையென்றால், இவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும். 
இளஞ்சிறார்கள், சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழவேண்டும். அவர்கள் மீது குற்ற முத்திரை இருக்கக்கூடாது என்பதற்காக சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே இவர்கள் இனி ஒருநாள்கூட சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக